இயக்குநர் ஷியாம் பெனகல், தனது படங்களின் மூலம் இந்தியாவை தாண்டி உலகளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர். இவர் இயக்கிய முதல் படமான அங்கூர் திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் அப்படத்தை மாற்று சினிமா என பாராட்டப்பட்டது. இந்தப் படத்திற்காக தேசிய விருதும் இவர் வாங்கினார். இதையடுத்து குறும்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என பலவற்றை இயக்கினார்.
இவர் இயக்கிய ஆவணப்படங்களான ‘எ சைல்ட் ஆஃப் தி ஸ்ட்ரீட்ஸ்’, ‘ஜவஹர்லால் நேரு’, ‘சத்யஜித் ரே’ பலரது கவனத்தை ஈர்த்தது. இவர் இதுவரை எட்டு தேசிய விருதுகள், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் இந்தியாவில் திரைத்துறையில் உயரிய விருதாக பார்க்கப்படும் தாதா சாகேப் பால்கே விருதுகள் உள்ளிட்டவை வாங்கியுள்ளார். கடைசியாக ‘முஜிப்: த மேக்கிங் ஆப் எ நேஷன்’ படத்தை இயக்கியிருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் வங்கதேசத்தின் முதல் அதிபரான முஜிபுர் ரஹ்மான் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று(23.12.2024) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 90. இவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கமல், சிரஞ்சீவி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கமல் தனது எக்ஸ் பக்கத்தில், “சமகாலத்தில் மிகவும் மனிதாபிமானமுள்ள கதைசொல்லியை இந்தியா இழந்துவிட்டது. நான் ஒரு குருவை இழந்துவிட்டேன். தனது லென்ஸ் மூலம், ஷியாம் பெனகல் உண்மையான இந்தியாவை திரைக்கு கொண்டு வந்து, ஆழ்ந்த சமூக விஷயங்களைக் கையாளும் போது சாதாரண மக்களை நேசிக்கச் செய்தார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது கலையை போற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.