Skip to main content

"எனக்காக கணவனைவிட்டு வந்த அக்காவின் உயிரைப் பறித்த மரணம்..." கலைஞானம் பகிரும் மலரும் நினைவுகள்!

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தன்னுடைய அக்காவைக் கொள்ளை நோய்க்குப் பறிகொடுத்த துயரமான சம்பவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

தாத்தா வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு வந்தது குறித்தும் அப்படி வந்த என்னை, என்னுடைய அக்காவும் அவரது கணவரும் அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றது குறித்தும் கடந்த பகுதியில் கூறியிருந்தேன். நான் அவர்களுடைய கைக்குழந்தையைப் பார்த்துக்கொண்டே அவர்களுடன் இருந்துவிட்டேன். எந்த வேலைக்கும் செல்லாமல் அவர்கள் வீட்டில் தொடர்ந்து சாப்பிட எனக்கு கூச்சமாக இருந்தது. விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்குத்தான் என பழமொழிகூட கூறுவார்கள். அது உண்மைதான். அதைப் புரிந்துகொண்ட என் அக்கா, என் மாமாவிடம் கூறி என்னை எங்கையாவது வேலைக்குச் சேர்த்துவிடும்படி கூறுகிறார். என் மாமா காலையில் தங்கமான மனிதர். இரவு தண்ணி போட்டுவிட்டால் என் அக்காவை அடிப்பார். “சரி... என்னுடன் வா...” என என்னை அழைத்துச் சென்ற என் மாமா, அவருடைய நண்பர் வைத்திருந்த ஒரு வாழைப்பழக் கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.

 

நான் நேர்மையானவனா, திருடனா எனக் கண்டறிய அந்தக் கடை முதலாளி எனக்குச் சோதனையெல்லாம் வைத்தார். “தம்பி நீ கடையை பாத்துக்கோ... நான் சாப்பிட்டு வந்துறேன்” எனக் கூறிவிட்டுச் சென்றார். அப்படிச் செல்லும்போது ஒரு ரூபாய் நாணயத்தை அங்கு விட்டுச் சென்றார். நான் அதை எடுத்து வைத்துக்கொண்டேன். சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்தவர், கடைக்கு யாரும் வந்தாங்களா என என்னிடம் கேட்டார். நான் இல்லை எனக் கூறிவிட்டு, அந்த ஒரு ரூபாய் நாணயத்தை அவரிடம் கொடுத்தேன். அந்தக் காலத்தில் ஒரு ரூபாய் என்றால் மிகப்பெரிய தொகை. அந்தக் காசிற்கு அரிசி வாங்கினால் ஒரு வாரத்திற்குத் திருப்தியாக சாப்பிடலாம். அதை வாங்கிக்கொண்ட அவர் நான் நேர்மையானவன்தான் என்ற முடிவிற்கு வந்தார்.   

 

அந்தக் கடையில் சில நாட்கள் வேலை பார்த்தேன். ஒருநாள் வாழைப்பழத்தாரை அறுக்கும்போது விரலில் கத்தி வெட்டி ரத்தம் வழிய ஆரம்பித்துவிட்டது. கடைக்காரரிடம் விவரத்தைக்கூற, அவர் என்னை வீட்டிற்கு அனுப்பிவைத்தார். பின், என் அக்கா உப்பும் கரியும் வைத்து கையில் கட்டுப்போட்டுவிட்டார். இலை வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பிய என் மாமா, விரலில் கட்டுப்போட்டிருப்பது குறித்து என்னிடம் கேட்டார். வாழைப்பழம் அறுக்கும்போது கையில் கத்தி வெட்டு விழுந்த விஷயத்தை என் அக்கா கூறினார். பின், என் மாமா பக்கத்து தெருவிலிருந்த சாராயக் கடைக்குக் குடிக்கச் சென்றார். குடித்துவிட்டு போதையில் திரும்பிய அவர், என்னை அழைத்து, “ஒரு பழம் வெட்ட தெரியுதாடா உனக்கு... நீ எப்படி வாழப்போற” எனக்கூறி என்னை அடித்துக்கொண்டே இருந்தார். இறுதியில், என்னை வீட்டைவிட்டு துரத்திவிட்டார். குடிப்பதற்கு முன்பு ஆறுதலாக விசாரித்த அவர், குடித்துவிட்டு வந்த பிறகு முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். எங்கு போவது என்று தெரியாமல் இரவோடு இரவாக நடக்க ஆரம்பித்தேன். அப்படியே நடந்துகொண்டிருக்கையில், தியேட்டரில் ‘ஹரிதாஸ்’ படம் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. தியேட்டர் நிறைந்துவிட்ட போதிலும் பாகவதர் பாடுவதைக் கேட்க மிகப்பெரிய கூட்டம் திரையரங்கிற்கு வெளியே திரண்டிருந்தது. பாகவதரின் பாடலைக் கேட்டவுடன் கை வலியெல்லாம் மறந்துவிட்டது. 

 

பிறகு அங்கிருந்து நடக்க ஆரம்பித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றேன். அந்த நேரத்தில் கோவில் நடை சாத்தப்பட்டிருந்தது. இன்னும் இரவு சாப்பாடு சாப்பிடாததால் மிகவும் பசியாக இருந்தது. அந்த நேரத்தில் எங்கும் சாப்பாடு கிடைக்காது. அதனால் அங்கிருந்த கோவில் தூணில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டே தூங்கிவிட்டேன். விடியும் நேரத்தில் கோவிலில் 5 மணி பூஜை நடக்கும். அந்த இருட்டிற்குள் வெறும் தீவெட்டி வெளிச்சத்தை வைத்துக்கொண்டு ஐயர் ஒவ்வொரு சாமிக்கும் பூஜை செய்துகொண்டே செல்வார். அன்று தீவெட்டி தூக்கக்கூடிய ஆள் வரவில்லை. அங்கிருந்த என்னை அழைத்த ஐயர், என்னிடம் தீவெட்டியைக் கொடுத்து என்னை தூக்கச் சொன்னார். தீவெட்டி வெளிச்சம் காட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முழுக்க சுற்றிவந்தேன். ஒருமணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பூஜை நடந்தது. பூஜையின் முடிவில் சர்க்கரை, முந்திரி, நெய் மற்றும் இன்ன பிற பண்டங்களை வைத்து உருண்டை வடிவில் செய்து யானைக்கு உணவாக கொடுப்பார்கள். ஒவ்வொரு உருண்டையும் மிகப்பெரிய அளவில் இருக்கும். அதில், எனக்கு ஒரு உருண்டையை கொடுத்தனர்.

 

அன்று காலை முதல் சாயங்காலம் வரை கொஞ்சம் கொஞ்சமாக அந்த உருண்டையை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். சாயங்காலம் நேரம் மாமா வீட்டில் இருக்கமாட்டார் என்பதால் அக்காவைப் பார்க்கச் செல்லலாம் என்று நினைத்து மீதி உருண்டையை அங்கேயே வைத்துவிட்டு அக்கா வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இரவோடு இரவாக நான் வீட்டைவிட்டு வெளியேறியதால், நாள் முழுக்க அக்கா என்னை தேடிக்கொண்டே இருந்துள்ளார். என்னைப் பார்த்ததும் கண் கலங்கிவிட்டார். அதுவரை தன்னை அடித்ததைப் பொறுத்துக்கொண்ட என் அக்காவிற்கு, என்னை அடித்ததைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “இனி இங்கிருக்க வேண்டாம்டா. நாம நம்ம ஊருக்கே போவோம்” எனக் கூறி என்னை அழைத்துக்கொண்டு கையில் பெட்டியோடு கிளம்பிவிட்டார். அந்தப் பெட்டியைத் தலையில் வைத்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன். கணவனை விட்டுவிட்டு குழந்தையைத் தூக்கிக்கொண்டு என் அக்கா வருகிறது என்றெல்லாம் அப்போது எனக்குப் புரியவில்லை. மாமாக்கு விஷயம் தெரிந்துவிடுமோ என பரபரப்பிலேயே இருந்த என் அக்கா, ஏறி உட்கார்ந்த பஸ் கிளம்பிய பிறகே நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். 

 

எங்கள் ஊரில் எங்களுக்கு வீடு கிடையாது. என் அப்பா இறந்துவிட்டார். அம்மா அருகிலுள்ள வடக்கப்பட்டியில் கூலிக்குக் கடலை பறிக்கும் வேலை பார்த்துக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டார். அதனால் எங்கள் பெரியப்பா வீட்டிற்குத்தான் நாங்கள் சென்றோம். அங்கு சென்றவுடன் 3 ஆடுகள் வாங்கிக்கொடுத்து என்னை மேய்க்கச் சொல்லிவிட்டார். எங்கள் பெரியப்பாவிற்கு ஐந்து பிள்ளைகளுக்குமேல் உள்ளதால் எங்களைக் கூடுதலாக சமாளிக்க அவருக்குச் சிரமமாக இருந்தது. அதைப் புரிந்துகொண்ட என் அக்கா, நான் அம்மாவிடம் செல்கிறேன் எனக்கூறி வடக்கப்பட்டிக்குச் சென்றுவிடுகிறார். அந்த நேரத்தில் பிளேக் என்ற கொள்ளை நோய் பரவிக்கொண்டிருந்தது. அதற்கு மருந்தெல்லாம் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய் தாக்கினால் மரணம்தான் ஏற்படும். வடக்கப்பட்டியில் 150 வீடுகள்வரைதான் இருந்தது. அதில், நிறைய பேர் இந்தக் கொள்ளை நோய்க்கு இறந்துவிட்டனர். என் அக்கா இந்தக் கொள்ளை நோய்க்கு இறந்துவிட்டதாக ஒருவர் வடக்கப்பட்டியிலிருந்து வந்து என் பெரியப்பாவிற்குத் தகவல் கொடுத்தார். இங்கிருந்து போகும்போது நன்றாகத்தானே அக்கா இருந்தார். பிறகு எப்படி இறந்தார் என்று யோசித்துக்கொண்டே, வடக்கப்பட்டி நோக்கி என் பெரியப்பாவுடன் கிளம்பினேன். அப்போது கொள்ளை நோய் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. பின்னாட்களில்தான் அதுபற்றி தெரிந்துகொண்டேன்.

 

வடக்கப்பட்டியில் என் அக்காவின் சடலத்தைச் சாய்த்து வைத்திருந்தார்கள். தம்பி அடிவாங்கக் கூடாது என்று நினைத்து நமக்காக வந்த அக்கா, இப்படி இறந்துவிட்டாரே என்று நினைத்து நான் அழுதிருக்கணும். ஆனால், எனக்கு அழுகை வரவில்லை. அப்போது எனக்கு 12 வயதுதான் என்பதால் எந்த வெளியுலகமும் தெரியவில்லை. பிற்காலத்தில் ‘சினிமா சீக்ரெட்’ புத்தகத்தில் இதுபற்றி எழுதும்போது கண்ணீர் வந்துவிட்டது. என் மாமாவிற்கு தகவல் கொடுத்தனர். இறுதிச்சடங்கிற்கு வந்த அவர், போகும்போது கைக்குழந்தையை அவருடன் தூக்கிச்சென்றுவிட்டார். நான் பெரியப்பா வீட்டில் ஒருவேளை சாப்பிட்டுக்கொண்டு, ஆடு மேய்ப்பதைத் தொடர்ந்தேன்.

 

 

சார்ந்த செய்திகள்