உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 76வது கேன்ஸ் திரைப்பட விழா இன்று (17.05.2023) தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்படவுள்ளன.
இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் இந்திய பிரபலங்களான நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா மற்றும் மிருணால் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும், இந்தியாவின் பிரதிநிதியாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு கலந்து கொள்கிறார். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் காணொலி வாயிலாக கலந்து கொள்கிறார்.
சிவப்பு கம்பள வரவேற்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இயக்குநர் விக்னேஷ் சிவன் இவ்விழாவை காண பிரான்ஸ் சென்று கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இவ்விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜீன் டு பாரி' (Jeanne du Barry) படம் திரையிடப்பட்டது. இப்படம் 1700 காலகட்டத்தில் பிரான்சின் அரசனாக இருந்த ஜானி கிங் லூயிஸ் 15-ன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். கிங் லூயிஸ் கதாபாத்திரத்தில் ஜானி டெப் நடித்துள்ள இப்படத்தை மைவென் இயக்கியுள்ளார்.
இப்படம் திரையிடப்பட்ட திரையரங்கில் இருந்த அனைவரும் கிட்டத்தட்ட 7 நிமிடத்துக்கு எழுந்து நின்று கைதட்டினர். அதனைப் பார்த்த ஜானி டெப் நெகிழ்ச்சியடைந்து கண்கலங்கி விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.