சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 190 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வல்லரசு நாடானா அமெரிக்கா உட்பட பொருளாதார ரீதியில் உயர்ந்த நிலையில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த வைரஸை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறி வருகின்றன. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால் அனைத்து நாடுகளும் இதையே வலியுறுத்தி வருகின்றன. முன்னெச்சரிக்கையாக இந்தியா உட்பட பல நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளது.
இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,50,000-ஐ தாண்டியுள்ளது. மேலும் உலகளவில் 22,26,941 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5,63,670 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இன்ஸ்டாவில் தன்னுடைய முதல் பதிவாக வெளியிட்டுள்ள வீடியோவில், இந்தத் தருணத்தில் மக்களின் வாழ்க்கையில் ஏற்கனவே மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட்ட கண்ணுக்குப் புலப்படாத எதிரியைப் பற்றி பேசியாக வேண்டும். உலகத்துக்காகவும், எதிர்காலத்துக்காகவும், சமூகத்துக்காகவும், நமக்காகவும், இந்த இருண்ட காலகட்டத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவ முயற்சிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
இந்த ஊரடங்கு காலத்தில் நாம் துவண்டு போய்விடக் கூடாது. இன்று ஆக்கப்பூர்வமாக நீங்கள் சிந்தித்தால் அது நாளை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவும். வரையுங்கள், படியுங்கள், சிந்தியுங்கள், உங்கள் மொபைல் போனில் படம்பிடியுங்கள், இசைக்கருவி வாசிக்கத் தெரிந்தால் வாசியுங்கள். இல்லையென்றால் கற்றுக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.