இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா 'ஜெய் பீம்' படத்தில் நடித்துள்ளார். இதில், ரஜிஷா விஜயன், லியோ மோல் ஜோஸ், மணிகண்டன், ஜோஷிகா மாயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2டி என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வக்கீலாக சூர்யா நடித்துள்ளார். கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான இப்படம் பெரும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.
'ஜெய் பீம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான ஜோஷிகா மாயா தனியார் பள்ளி ஒன்றில் படித்துவருகிறார். இவர் 'ஜெய் பீம்' படத்தில் நடித்ததற்காக பள்ளி நிர்வாகம் டி.சி. வாங்கச் சொல்லியுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜோஷிகா மாயாவின் பெற்றோர், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் விளக்கம் கேட்டிருந்தனர். அதற்கு, தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாடலிங், சினிமா போன்றவற்றில் நடிக்கக் கூடாது என விதிமுறைகள் உள்ளது. அதை ஜோஷிகா மாயா மீறிவிட்டதால் பள்ளி நிர்வாகம் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டது.
இதனையறிந்த நடிகர் சூர்யா, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் பேசி மாணவி ஜோஷிகா மாயாவை மீண்டும் அப்பள்ளியில் படிப்பைத் தொடர வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.