தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் கெளதம் மேனன் நடிகர் சிம்புவை வைத்து 'வெந்து தணிந்தது காடு' படத்தை இயக்கிவருகிறார். இதற்கு முன்பு கெளதம் மேனன் - சிம்பு கூட்டணியில் 'விண்ணை தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.
இதனிடையே, இயக்குநர் கெளதம் மேனன் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான 'ருத்ர தாண்டவம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில் கெளதம் மேனன் நடிக்கும் மற்றொரு புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கும் படத்தில் கௌதம் மேனன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'அன்புச்செல்வன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'காக்க காக்க' படத்தில் அன்புச்செல்வன் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி சூர்யாவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அதனால் இப்படத்திற்கு 'அன்புச்செல்வன்' என பெயரிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு சிவா பத்மயன் இசையமைக்கவுள்ளார். செவன்ட்டி எம்.எம். ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. கெளதம் மேனன் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.