அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. 7 வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் நடித்துள்ள இப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் த்ருவ் விக்ரம் பேசுகையில், “இந்த நிகழ்வில் கலந்து கொண்டதை எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகவும், பெருமிதமாகவும் கருதுகிறேன். நடிகனாக இல்லாதிருந்தாலும், ரசிகனாக இந்நிகழ்வில் கலந்து கொண்டிருப்பேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘கோப்ரா’ படத்தின் பணிகள் தொடங்கும் போது அப்பாவிடம், ‘கோப்ரா’வில் என்ன ஸ்பெஷல் என கேட்டேன். அஜய், அஜயின் விஷன்,கிரியேட்டிவிட்டி, திரையில் சொல்லும் உத்தி என்றார். இந்தப் படத்திற்காக அஜய்யும் அப்பாவும் தங்களுடைய கடின உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். இயக்குநர் அஜய்யின் கற்பனையை திரையில் சாத்தியப்படுத்த வேண்டும் என்பதற்காக அப்பா கடினமாக உழைத்திருக்கிறார்.
கே ஜி எஃப் படத்தில் நடித்ததற்காக ஸ்ரீநிதிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். உங்களுக்கு தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் ‘கோப்ரா’வில் நடித்திருக்கும் உங்களுக்கும் இங்கு பெரும் வரவேற்பு கிடைக்கும். மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி ஆகிய இருவரும் இந்த படத்தில் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருப்பார்கள் என நம்புகிறேன்.
என்னுடைய அப்பா கடின உழைப்பாளி என்று அனைவருக்கும் தெரியும். அவருடன் ‘மகான்’ படத்தில் பணியாற்றும்போது ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனித்தேன். நீளமான காட்சி ஒன்றில் மும்முரமாக நடித்துக் கொண்டிருந்தோம். ஒருகட்டத்தில் எனக்கு சோர்வு ஏற்பட்டது. ஆனால் அப்பா சோர்வே இல்லாமல் உற்சாகத்துடன் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம், “என்னப்பா.. எனக்கு எனர்ஜி போய்ருச்சு. ஆனால் நீங்க உற்சாகமாக இருக்கீங்க... எப்படி?” எனக் கேட்டேன். அதற்கு அவர், ''இந்த இடத்தை பெற கடுமையான போராட்டத்தை சந்தித்திருப்பதால் இந்த உற்சாகம் தொடர்கிறது” என்றார். 'கோப்ரா' மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.