Skip to main content

“திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர்” - நடிகை ஜோதிகா பரபரப்பு கருத்து!

Published on 17/11/2024 | Edited on 17/11/2024
actress Jyotika sensational comment Planning and spreading defamation 

சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த கங்குவா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 14 ஆம் தேதி (14.11.2024) பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பதானி மற்றும் பாபி தியோல் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கின்றனர். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, கே.எஸ் ரவிகுமார், கருணாஸ், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 2டி மற்றும் 3டியில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. குறிப்பாக படம் முழுக்க அதிகமாக சத்தம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. இந்த விமர்சனம் தொடர்பாக ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி, தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர், “பார்வையாளர்கள் தலை வலியுடன் வெளியேறினால், எந்த படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாக எழுந்த விமர்சனத்தை அடுத்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, திரையரங்க உரிமையளர்களுக்கு சத்தத்தின் அளவை 2 புள்ளிகள் குறைக்க அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “3 மணி நேர படத்தில் முதல் அரை மணி நேரம் மட்டுமே சற்று சரியில்லை. மற்றும் 2.30 மணி நேரம் படம் நன்றாகவே உள்ளது. சமீபத்தில் வெளியான பெரிய பட்ஜெட் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள், பெண்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளன. ஆனால் இந்த படங்களுக்கு எவ்வித எதிர்மறை விமர்சனங்களும் இல்லை.

actress Jyotika sensational comment Planning and spreading defamation 

கங்குவா படத்தின் முதல் ஷோ முடியும் முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. கங்குவா திரைப்படத்தின் ஒளிப்பதிவு தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில் உள்ளது. கங்குவா திரைப்படத்தில் உள்ள நல்ல விஷயங்களை விமர்சகர்கள் கவனிக்காமல் விட்டது ஏன்?. கங்குவா திரைப்படத்தைப் பற்றி வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்