கேரளாவில் திரைப்பட நடிகராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருபவர் சுக்கூர். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இவர் 1994 ஆம் ஆண்டு ஷீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கதீஜா ஜாஸ்மின், பாத்திமா ஜெபின், பாத்திமா ஜோசா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.
இவர்களது திருமணம் இஸ்லாமிய தனிநபர் ஷரியத் முறைப்படி நடந்துள்ளது. இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி ஆண் வாரிசு இல்லாத சுக்கூரின் சொத்துக்களில் மூன்றில் இரு பங்குகள் தான் 3 மகள்களுக்கும் செல்லும். மீதமுள்ள ஒரு பங்கு சுக்கூரின் சகோதரர்களுக்குச் சென்று விடும். இந்த நிலையில் சுக்கூர் மற்றும் அவரது மனைவியும் பெண்கள் தினமான நேற்று காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரண்டாவது முறையாகத் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தில் சாட்சியாக அவர்களது 3 மகள்களும் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சுக்கூர். இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் சில அமைப்பிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதற்கு கேரளாவில் உள்ள பிரபல சன்னி பிரிவு உயர் கல்வி மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. முஸ்லிம் தனிநபர் சட்டங்கள் மற்றும் இஸ்லாம் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தனது சொத்தில் ஒரு பகுதி சகோதரர்களுக்குப் போய் விடும் என்ற எண்ணத்தால் இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே சுக்கூர், எந்தவொரு மத நம்பிக்கைகளையும் அவமதிப்பு செய்வதற்கான நோக்கம் தனக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இவர்களது இந்த முடிவிற்கு திரைப் பிரபலம் ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.