சிலை கடத்தல் என்பது பல காலமாக நிகழ்ந்து வரும் ஒரு குற்றம். அப்படிப்பட்ட குற்றம் நிகழ்ந்த பரபரப்பான ஒரு வழக்கு பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மிடம் விவரிக்கிறார்.
1961 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மியூசியத்தில் அதிகாரியாக இருந்த டாக்டர் டக்ளஸ் பரே கும்பகோணத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிவபுரத்திற்கு வந்தார். சிவதலங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யும் ஒரே தலம் சிவபுரம் தான். பல்வேறு வித்தியாசமான நம்பிக்கைகளால் சிவபுரம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக விளங்கி வருகிறது. 'தென்னிந்திய சிலைகள்' என்கிற தலைப்பில் டக்ளஸ் பரே ஒரு புத்தகம் எழுதி வந்தார். அந்தப் புத்தகத்தை எழுதி முடித்து 1965 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
சிவபுரத்தில் உள்ள நடராஜர் சிலை ஒரு போலியான சிலை என்று தன்னுடைய புத்தகத்தில் டக்ளஸ் குறிப்பிட்டார். அந்தத் தகவலில் உண்மை இருக்கிறதா என்று விசாரிக்கப்படுகிறது. ஒரிஜினல் சிலையின் படங்களோடு அப்போது இருந்த சிலையை ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில் வேறுபாடுகள் தெரிந்தன. டக்ளஸ் அவர்கள் சொன்னது உண்மைதான் என்பதை அனைவரும் உணர்ந்தனர். தமிழ்நாடு அரசு இந்த வழக்கை விசாரித்தது. கிருஷ்ணராஜூ என்கிற சிபிசிஐடி டிஐஜி விசாரணைக்கு தலைமை ஏற்றார்.
சிவபுரத்தின் சிலை நியூயார்க்கில் இருக்கிறது என்கிற தகவல் கிடைத்ததால் இவர்களோடு சிபிஐ அதிகாரிகளும் இணைந்து நியூயார்க் சென்றனர். அங்கு சந்தேகத்துக்குரிய நபர் எந்தத் தகவலையும் தர மறுத்தார். இதனால் விசாரணை ஒரு தேக்க நிலையை அடைந்தது. ராமகிருஷ்ணன் என்கிற டிஎஸ்பி இன்னொரு பக்கம் விசாரணையைத் தொடர்ந்தார். வெளிநாடுகளிலும் சோதனை தொடர்ந்தது. அப்போது சில விஷயங்களை ராமகிருஷ்ணன் கண்டுபிடித்தார்.
1951 ஆம் ஆண்டு கஸ்தூரிரங்க ஐயங்கார் என்பவரின் நிலத்தை அன்னமுத்து படையாட்சி என்பவர் சீர்செய்து கொண்டிருந்தபோது அவருக்கு ஆறு சிலைகள் கிடைக்கின்றன. அந்த சிலைகள் சட்டப்படி கும்பகோணம் தாசில்தார் வசம் ஒப்படைக்கப்பட்டன. ஊர் மக்களும் முக்கியஸ்தர்களும் சேர்ந்து கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று அந்த சிலைகள் தங்களுக்கு வழிபடுவதற்காக வேண்டும் என்று கேட்டனர். அதன்பிறகு ஆறு சிலைகளையும் செம்மைப்படுத்துவதற்காக ராமசாமி என்பவரிடம் ஒப்படைத்தனர்.
பக்கத்து ஊரில் இருந்த திலகர், தாஸ் என்கிற சகோதரர்கள் கலைப் பொருட்களை விற்று சம்பாதிக்கும் தொழிலைச் செய்து வந்தனர். இந்த சிலைகள் குறித்து அறிந்த பிறகு, இது போன்றே புதிய சிலைகளைச் செய்து கோவிலுக்குக் கொடுத்துவிட்டு, பழைய சிலைகளை விற்றால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்து ராமசாமியிடம் கூறினர். அவர் முதலில் மறுத்தார். ஒருகட்டத்தில் பணத்தாசை காட்டி அவரை சம்மதிக்க வைத்தனர். 1956 ஆம் ஆண்டு புதிய சிலைகளை தாஸ் வசம் ஒப்படைத்தார் ராமசாமி.
அவற்றை வெளிநாட்டில் விற்றனர் சகோதரர்கள். அந்த சிலைகள் வெளிநாட்டிலேயே தங்கிவிட்டன. அந்த சிலைகள் இரண்டாகவும் மூன்றாகவும் வேறு வேறு நபர்களிடம் செல்கின்றன. அதிகாரிகள் துரத்திக்கொண்டே இருப்பதால் பென் ஹாலர் என்பவர் நடராஜர் சிலையை கலைப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் நியூ சைமன் பவுண்டேஷன் நிறுவனத்திற்கு விற்று விடுகிறார். அந்த சிலையை காட்சிப்படுத்தக் கூடாது என்று இந்தியாவிலிருந்து வழக்கு தொடுக்கப்படுகிறது. அவர்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்தினர். இந்த இடைவெளியில் சிலையை செம்மைப்படுத்த லண்டனில் உள்ள ஒரு பெண்மணியிடம் அனுப்பினர்.
- தொடரும்