Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; இரண்டு நிமிட ஃபோன் காலில் நம்மை ஏமாற்றுவது யார்?  பகுதி – 01

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

Digital cheating  Part – 1

 

உலகில் நல்லவர் – கெட்டவர் என இருதரப்பு இருப்பதுபோல் ஏமாற்றுபவர்கள் – ஏமாறுபவர்கள் என்கிற இரண்டு தரப்பினரும் உலகம் முழுவதுமே உள்ளார்கள். ஒருவரை மற்றொருவர் ஏமாற்றுவது எப்போது தொடங்கியது எனக்கேட்டால் மனித இனம் உருவானது முதலே எனச் சொல்லலாம்.

 

குழந்தைக்கு சோறு ஊட்டும் தாய், ‘நிலாவில் பாட்டி வடை சுடும் கதை’, ‘பூச்சாண்டி வர்றான், அவன்கிட்ட உன்னை புடிச்சி தந்துடுவன்’ எனச்சொல்லி சோறு ஊட்டுகிறாள். இந்தக் கதையை கேட்டும், ஏமாந்தும், பூச்சாண்டி வந்து புடிச்சிக்கிட்டு போய்டுவானே என அந்த குழந்தை பயந்து போய் தாயின் கையில் உள்ள உணவை சாப்பிடும். அந்த குழந்தையின் ஏமாற்றம் அப்போதே தொடங்கிவிடுகிறது.

 

ஆதாம், ஏவாளுக்கு ஆப்பிள் தந்து இதை சாப்பிடு, பசியை போக்கும் எனச் சொல்லித்தானே கனியை பறித்து தந்து சாப்பிட வைத்தது. அண்ணன் தம்பியான விநாயகர், முருகனுக்கு இடையே உலகை யார் முதலில் சுற்றி வந்து கனியை பெறுவது என்கிற போட்டி தொடங்கியபோது, தன் வாகனமான மயில் மீதே அமர்ந்து உலகை சுற்றி வந்தார் முருகர். என்னை பெற்ற தாய் தந்தையே உலகம் எனச்சொல்லி சிவபெருமான் – பார்வதி தேவியை சுற்றிவந்து விநாயகர் கனியை பெற்றதெல்லாம் சீட்டிங் தானே?

 

நாடுகளை அரசாண்ட அரசர்களும், மக்கள் நலனுக்கான ஆட்சி எனச் சொல்லிக்கொண்டு முடியாட்சியைதானே செய்தார்கள். மக்களாட்சி எனச் சொல்லிவிட்டு முடியாட்சி நடத்தியது மோசடிதானே.  

 

நாங்கள் உங்கள் நாட்டிற்கு வியாபாரம் செய்ய வந்துள்ளோம். எங்களுக்கு கொஞ்சம் அனுமதி தாருங்கள் பிரபுவே என இந்தியாவுக்குள் வந்த டச்சு தேசத்தினரும், பிரான்ஸ் நாட்டினரும், பிரிட்டிஷாரும் இந்திய மன்னர்களிடம் அனுமதி வாங்கி கடற்கரை ஓரங்களில் வியாபாரம் செய்ய துவங்கினார்கள். நம் நாட்டில் கிடைத்த தங்கம், வைரம், வைடூரியம் மட்டுமல்லாமல் இந்திய வைத்திய முறையையும், நல்ல வேலை கிடைக்கும், சுகமான வாழ்வு வாழலாம் என இந்திய மக்களை ஏமாற்றியும் தன் நாட்டிற்கு அழைத்துச் சென்று அடிமையாக்கியது மோசடிதானே.

 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இந்திய தொழிலதிபர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டுவந்து, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவோம் என வாக்குறுதி தந்து நாட்டு மக்களிடம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளார்கள். இன்னும் ஒரு ரூபாய் கூட ஓட்டுப்போட்டவரின் வங்கி கணக்குக்கு வரவில்லை. வாக்குறுதிகள் மோசடிகள் தானே.

 

உங்கள் பணத்தை எங்களிடம் டெபாசிட் செய்யுங்கள். பாதுகாப்பாக இருக்கும் எனச் சொன்ன வங்கிகள், வாடிக்கையாளனின் வங்கி கணக்கில் இருந்து பலவற்றுக்கும் சார்ஜ் செய்து பணத்தை எடுத்து ஓட்டாண்டியாக்கிக் கொண்டு இருப்பது மோசடிதானே. இப்படி மோசடி, ஏமாற்றுதல் என்கிற சீட்டிங், கடவுள் எனச் சொல்லப்படுபவர்கள் காலம் முதல் தற்காலம் வரை ஒவ்வொரு விதமாக நடந்து கொண்டேதான் இருக்கிறது.

 

ஏமாற்றியவர்கள் ஆட்சி நாற்காலியில் அமர்ந்து கொண்டு சுகமாக அதிகாரம் செலுத்திக் கொண்டுள்ளார்கள். ஏமாந்துபோய் ஓட்டு போட்டவர்கள் வெளியே சொல்லமுடியாமல் தவிக்கிறார்கள். ஏமாற்றியவர்களுக்கு வெக்கம் இல்லை. ஏமாந்தவர்கள் வெட்கத்தோடு வெளியே சொல்லமுடியாமல் தவிக்கிறார்கள். இதுதான் ஏமாற்றுபவர்களின் மூலதனம். மோசடிக்காரனை; ஏமாற்றுக்காரனை நாயகனாகவும், ஏமாந்தவனை ஏமாளியாகவும் சமூகம் சித்தரிப்பதாலே ஏமாறுபவர்கள் புகார் தரக்கூட தயங்குகிறார்கள். விதவிதமாக ஏமாற்றுபவர்கள் காலம் முழுக்க மக்களுடன் மக்களாகவே உள்ளார்கள். இதனை வாய் ஜாலம் என்றும், சாமர்த்தியம் என்றும், தொழில் தந்திரம் என்றும் பல்வேறு பெயர்களை வைத்து பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

 

கிராமமோ நகரமோ நாம் வசிக்கும் பகுதியை உற்று நோக்குங்கள். ஒருவர் எந்த வேலைக்கும் செல்லமாட்டார். இஸ்திரி போட்ட சட்டையை போட்டுக்கொண்டு நெற்றி நிறைய பொட்டு வைத்துக்கொண்டு, கை மணிக்கட்டில் விதவிதமாக கலர் கயிறு கட்டிக்கொண்டு இருப்பார். அவருக்கு ஒரு குடும்பம் இருக்கும், குடும்பத்தை நடத்திக்கொண்டுதான் இருப்பார். வேலைக்கே செல்லாத அவருக்கு பணம் எப்படி வருகிறது என்பதை ஆராய்ந்து பாருங்கள். வேலைவெட்டிக்கு போகாத அவர்களுக்கு வாய்ஜாலம் தான் முதலீடு. காவல்நிலையத்தில் நடக்கும் பஞ்சாயத்து முதல் லாட்ஜில், தென்னந்தோப்பில், மாந்தோப்பில், ஊர்ச்சாவடியில் நடக்கும் பஞ்சாயத்துக்களில் இவர்கள் தவறாமல் இருப்பார்கள். வாய் வார்த்தையாலே யாரோ ஒருவருக்கு சாதகமாகப் பேசி அந்த தரப்பை வெற்றி பெறவைப்பர்கள்.

 

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் கொஞ்சம் நேரம் நின்று பாருங்கள். உங்களை இரண்டு விதமானவர்கள் நெருங்கி வருவார்கள். பஸ்சுக்கு காசில்ல சார், 50 ரூபா தந்திங்கன்னா ஊருக்கு போய்டுவேன் என்பார்கள். மற்றொருவர் டிப்டாப்பாக இருப்பார். நன்றாக இன் செய்யப்பட்ட உடையுடன் வந்து, ஒன் ஹெல்ப் சார்? என் பார்ஸ்ச யாரோ திருடிட்டாங்க. ஊருக்கு போக பணமில்லை. டூ ஹன்ட்ரட் ருபீஸ் தந்திங்கன்னா, ஊருக்கு போய்ட்டு அனுப்பி வைப்பேன் என்பார். திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, சமயபுரம், திருப்பதி போன்ற ஆன்மீக நகரங்களுக்கு சென்றிருப்பீர்கள். அங்கே சிலர் உங்கள் அருகே வந்து கை நீட்டுவார்கள். ஒரு டீ வாங்க காசு குடு சாமி, பசி வயித்த கிள்ளுது என்பார்கள். இரண்டு இட்லி வாங்கி தா சாமி, சாப்பிட்டு நாலு நாளாச்சி என்பார்கள். இவர்கள் அனைவரும் சீட்டிங் பர்சன் என்பது ரெகுலராக அந்த பேருந்து நிலையத்துக்கோ, ரயில் நிலையத்துக்கோ, கோவிலுக்கு செல்பவர்களுக்கு தெரியும். புதியதாக போகிறவர்கள் அவர்கள் பேச்சில் ஏமாந்துவிடுவர். இப்படி விதவிதமாக ஏமாற்றுபவர்களும், இவர்களிடம் ஏமாந்தவர்களும் இன்றும் இருக்கிறார்கள்.

 

பொய் சொல்லாதவன், சக மனிதனை ஏமாற்றாத மனித உயிர்கள் உலகத்தில் எங்கும் கிடையாது என்பதே உண்மை. ஏதோ ஒருவகையில் நாம் இப்போதும் இன்னொருவரை ஏமாற்றிக்கொண்டும், மற்றவரிடம் ஏமாந்துகொண்டும்தான் இருக்கிறோம்.

 

கோவில் கோபுர கலசம் கோடி ரூபாய் மதிப்பு, மண்ணுளி பாம்பு (டபுள் டக்கர்) 50 லட்சம் என விதவிதமாக மோசடி செய்தார்கள். இதனை இப்போதும் நம்ப பெரும் கூட்டமே உள்ளது. அவர்கள் சொல்வது உண்மையா என பகுப்பாய்வு செய்யும் பகுத்தறிவு மனிதர்களிடம் சரியாக இல்லை என்பதே எதார்த்தம். அதனால்தான் இந்த மோசடியில் லட்சங்கள் முதல் கோடிகள் வரை ஏமாந்தவர்கள் உண்டு. பணத்தை ஏமாந்துவிட்டோமே என மானத்துக்கும், பணத்துக்கு வட்டி கட்டுவதற்கு பயந்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்டவர்களும் உண்டு. ஆனால் ஏமாற்றியவன் எங்கும் இறந்ததாக பதிவு இல்லை. காவல்துறை பிடித்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கிறது. வெளியில் வந்து விதவிதமாக ஏமாற்றவே செய்கிறான்.

 

டெக்னாலஜி வளர்ச்சியால் ஏமாற்றுபவர்கள், இப்போது உங்களை நேரில் சந்தித்து பசிக்குது என்றோ, பர்ஸ் திருடுபோய்விட்டது என்றோ, குழந்தைக்கு பால் வாங்கவேண்டும் என்றோ விதவிதமாக கதை சொல்ல தேவையில்லை. உங்களிடமிருந்து 10 ரூபாயோ, 10 ஆயிரம் ரூபாயோ அதனை கொள்ளையடிக்க விதவிதமாக திட்டமிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இரண்டு நிமிடம் போதும் உங்களை ஓட்டாண்டியாக்க. ஒரு ஃபோன் காலில் உங்கள் வங்கி கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் சுரண்டிவிடுவார்கள். நீங்கள் வாட்ஸ்அப்பில் வரும் ஒரு போட்டோவை தன்னிலை மறந்து பார்த்தால் உங்கள் மொத்த சொத்தையும் இழக்கவேண்டிய நிலை ஏற்படும்.

 

இப்படி ஏமாந்தவர்கள் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கில் உள்ளார்கள். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான புகார்கள் பதிவாகின்றன. பதிவாகாத புகார்கள் எவ்வளவு, புகார் தராதது எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. கொரோனா காலத்தில் இறந்தவர்கள் எவ்வளவு பேர் என்கிற டேட்டா கூட வைத்திருக்காத அரசாங்கம்தானே நம்முடைய அரசாங்கம். அப்படிப்பட்ட அரசாங்கம்தான் டிஜிட்டல் இந்தியா எனப் பிரச்சாரம் செய்கிறது.

 

டிஜிட்டல் எனச் சொல்லும் இந்தியாவில் மக்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும் மொபைல், சோசியல் மீடியா பக்கங்கள், இணையதளங்கள், ஏ.டி.எம். கார்டுகள், ஆப்கள் என டெக்னாலஜி வழியாக எப்படியெல்லாம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்? இதனைச் செய்வது யார்? இவர்களின் பின்னணி என்ன? இதனை தடுப்பது எப்படி? இதிலிருந்து நாம் சிக்காமல் தப்பிப்பது எப்படி? என்பதையே பார்க்கப் போகிறோம்.

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை தொடரும்…