1970-களில் தமிழ்நாடு காவல்துறைக்கு மிகவும் சவாலாக விளங்கிய ஒரு வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மிடம் விவரிக்கிறார்.
1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வயதான பெரியவர் ஒருவர் சாலையில் சுயநினைவின்றி கீழே விழுந்து கிடக்கிறார். செங்கல்பட்டு ஸ்டேஷனுக்கு அவரை அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரித்தனர். அவர் போட்டிருந்த சட்டையில் அதைத் தைத்துக் கொடுத்த டெய்லரின் விலாசம் இருந்தது. அவர் ராமநாதபுரம் மாவட்டம் சிறுவயல் பகுதியிலிருந்து வந்தவர் என்பது அதன் மூலம் தெரிந்தது. அவர் 1,50,000 ரூபாயை எடுத்துக்கொண்டு வந்து உயர் ரக ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததும் தெரிந்தது. அதன்பிறகு எப்படி அவர் தெருவில் விழுந்து கிடந்தார் என்பது தெரியவில்லை. அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஆந்திராவில் ஒரு இளைஞர் நிர்வாணமாகத் தூக்கில் தொங்குகிறார். ஆந்திரா போலீஸாரால் அவருடைய பின்னணியைக் கண்டறிய முடியவில்லை. இறந்தவரின் உடலை அவர்கள் எக்ஸ்ரே எடுத்து வைத்துக்கொண்டனர். இந்த வழக்கிலும் அதன் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை.
சில காலம் கழித்து சித்தூரில் எரிந்த நிலையில் இருந்த ஒரு இளைஞரின் உடல் கிடைக்கிறது. சந்தேகத்துக்குரிய மரணம் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மூன்று மாதங்கள் கழித்து அதே சித்தூரில் சாலையோரமாக இறந்து கிடந்த ஒருவரின் உடல் கிடைத்தது. மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து ஆந்திராவில் ஒரு மனித உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. உடற்கூராய்வு செய்து பார்த்தபோது கழுத்தை நெரித்துக் கொன்று அதன்பிறகு உடலை எரித்தது தெரிந்தது. மீண்டும் சில மாதங்கள் கழித்து அதுபோன்றே கொல்லப்பட்ட ஒரு உடல் ஆந்திராவில் கிடைத்தது. கொலைகள் தொடர்ந்தன. ஆந்திராவில் ஒருவரைக் காணவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த மனிதரின் உடலை கர்நாடக போலீசார் அதற்கு முன்பே கண்டறிந்து வைத்திருந்தனர். இறந்துபோன அனைவருமே ஹவாலா மோசடி, தங்கக் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபடக் கூடியவர்கள். இந்த வழக்கு கிரைம் பிராஞ்ச் போலீசாருக்கு மாற்றப்படுகிறது. இளம் போலீசாரை உள்ளடக்கிய ஒரு டீம் அதற்காக உருவாக்கப்பட்டது.
தொடர் கொலையில் இறுதியாகக் கொல்லப்பட்டவர் தைக்கா தம்பி என்பவர், முகமத் தம்பி என்கிற அவருடைய ஊர்க்காரரோடு தான் கடைசியாக இருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் முகமத்திடம் சென்று போலீசார் விசாரித்தனர். தைக்கா தம்பி ஹவாலா மோசடிகளில் ஈடுபடுபவர் என்று முகமத் தெரிவித்தார். காதர் என்பவருடைய அறிமுகம் கிடைத்து அவரை தைக்கா தம்பியிடம் அறிமுகப்படுத்தி வைக்க முடிவெடுக்கிறார் முகமத். தனக்கு சுங்கத்துறை அதிகாரிகள் சிலரைத் தெரியும் என்றும் அதன் மூலம் நிறைய சம்பாதிக்கலாம் என்றும் காதர் முகமதுக்கு ஆசை காட்டுகிறார். ஆனால் அவர் சுங்கத்துறை அதிகாரிகள் என்று நினைத்தவர்கள் உண்மையில் சுங்கத்துறை அதிகாரிகள் இல்லை. அவர்கள் கள்ளக் கடத்தல் செய்து பணம் கொண்டு வருபவர்களிடம் கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள்.
அவர்கள் இணைந்து அப்படி ஒருவரிடம் 1,50,000 ரூபாயைப் பறித்துக்கொண்டு செங்கல்பட்டு பகுதியில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர். இதுதான் நாம் குறிப்பிட்ட, ரோட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்த முதல் நபர். அவருடைய பெயர் உள்ளான் செட்டியார். சாகுல் ஹமீது என்பவரிடமும் இதேபோன்று சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து அதன் மூலம் கொள்ளையடிக்க இந்த கும்பல் முயன்றது. வழக்கம்போல் காரில் கடத்திச் சென்று சாகுலுக்கு ஒரு ஊசியை செலுத்துகிறது இந்த கும்பல். அவரை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று, ஆடைகளைக் கழற்றி, மரத்தில் தூக்குக் கயிறு கட்டி அதில் தொங்கவிட்டனர். அவருடைய பணத்தை மர்ம நபர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். இதில் அவர்களுக்கு உதவியவர்களுக்கும் பங்குண்டு.
இந்தக் குழுவில் உள்ள வேணுகோபாலின் நண்பரான தட்சிணாமூர்த்திக்கு இவர்கள் செய்யும் அதீத செலவுகளைப் பார்த்து சந்தேகம் வருகிறது. அவர் உண்மையாகவே சுங்கத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கும் வேலையைச் செய்து வந்தார். அதிகாரிகளிடம் இவர்கள் பணத்தைத் தண்ணீர் போல் செலவழிப்பது குறித்துத் தெரிவித்தார். சுங்கத்துறை அதிகாரிகள் வேணுகோபாலின் வீட்டில் வந்து சோதனை நடத்தினர். எதுவும் கிடைக்கவில்லை.
- தொடரும்...