Skip to main content

வைகை ஆற்றில் தங்கக்குதிரையில் பக்தர்களுக்குக் காட்சி தந்த கள்ளழகர்!

Published on 12/05/2025 | Edited on 12/05/2025

 

Kallazhagar appears to devotees on a golden horse in the Vaigai River

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (12.05.2025) சித்திரா பௌர்ணமி அன்று நடைபெற்று வருகிறது. 

அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை மதுரை மூன்றுமாவடிக்கு வந்தார். நேற்று இரவு 10 மணி அளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். அங்கு பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். 

இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலா்மாலையை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று (12-05-25) காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். 

இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.