Skip to main content

"என் சிரிப்பின் அளவு பெருகிக்கொண்டே போக அவன் என்னை ஒரு பைத்தியக்காரனைப் போல.." - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #7

Published on 31/07/2020 | Edited on 01/08/2020
yஹ

 

 

கேள்விகள் பதில் தெரியாத முதுகை வளைத்துக்கொண்டு, அசூசையான கூனனின் சீழ்பிடித்த கொப்பளங்களில் இருந்து வெடிக்கும் சுடுநீரைப்போல, அது நொடிக்கொரு முறை வெடித்துக்கொண்டே இருக்க, வலியோடு கூடிய சுகம் ஒன்று வருடிக்கொடுக்க கால், கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த அவனைப் பார்த்து, எனக்கு சிரிப்பு அதிகமாக வந்தது. தலைகவிழ்ந்த நிலையில் நான் செய்யும் சேட்டைகளை எல்லாம் அவன் சகித்துக் கொண்டே இருக்கிறான். என் சிரிப்பின் அளவு பெருகிக்கொண்டே போக அவன் என்னை ஒரு பைத்தியக்காரனைப் போல கலங்கிய சிவந்த விழிகளோடு பார்த்தான்.

 

நீ யார்? தெளிவற்ற வார்த்தைகள், ஏன் என்னை இப்படி? மீண்டும் கேள்விகள் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தேன். நான்...நான்...யோசி நல்லா யோசி... இதுவரையில் நீ என்னைப் பார்த்தது இல்லை ஆனால் என்னை உணர்ந்திருக்கிறாய் நான் உனக்குள் தான் இருக்கிறேன் வாசலில் காலிங்பெல்லின் ஒலி, நான் அவனை விடுத்து அவனை பிணைத்திருந்த கயிற்றை எடுத்து என் தோளில் சுற்றியபடியே ரிவ்யூ மிரரில் எட்டிப்பார்த்தேன். ஒரு குட்டிப்பெண்.....சங்கிலியில் பிணைத்திருந்த கதவு முழுமையாக விலகாமல் என்ன என்றேன். அம்மா ஆன்ட்டிகிட்டே பருப்புப்பொடி வாங்கிட்டு வரச்சொன்னாங்க? என்றது ஆன்ட்டி இல்லையா? இல்லை...அவங்க போயிட்டாங்க

 

எப்போ வருவாங்க அங்கிள்...சட்டென்று அந்த குட்டிப்பெண்ணையும் உள்ளே இழுத்துப் போட்டால் என்ன என தோன்றிய எண்ணத்தை உடனே ரப்பர் இன்றி அழித்தேன். உடலில் ஏற்றிக்கொண்ட வீரியம் குறைந்தது. தெரியாது என்று பதிலுரைத்து முகத்தில் அறைந்தாற்போல் கதவைச் சாத்தினேன். அந்த அறைக்குள் நுழைவதற்குள் சற்று முன் அந்த குட்டிப்பெண் கேட்டுவிட்டுப் போன ஆன்ட்டி காலை இடறினாள். உள்ளே கட்டிப்போட்டு இருக்கிறேனே அவனின் மனைவி இடதுகாலால் அவளின் வயிற்றில் ஓங்கி உதைக்க அவள் சப்தமே கேட்காமல் மெளனமாக சோபாவின் பக்கம் உடலை நகர்த்திக்கொண்டாள். அந்த எதிர்மறை இல்லாமல் இருந்தது மிகவும் பிடித்திருந்தது. இடதுபுறம் எனது அடிக்குப் பயந்து அந்த இரண்டு உடல்களும் செயற்கையான மரத்தின் பின்புறம் ஒளிந்து கொள்ள, திருப்தியாய் அந்த அறைக்குள் நுழைந்தேன்.

ர

 

முதல் பார்த்ததை விடவும், ரொம்பவே பயந்து போயிருந்தான். சம் டிஸ்டபர்ன்ஸ் என்று சொல்லிவிட்டு அமர்ந்தேன். ம்...ஏற்கனவே முடிக்கற்றைகள் ஒவ்வொன்றையும் பிடிங்கியாகிவிட்டது. கொரடு கொண்டு முகச்சவரம் செய்யத் தேவையே இல்லாதபடி தாடியையும் மீசையையும் உருவியாகிவிட்டது. சொல்லப்படாத இடங்களில் எல்லாம் சிறுசிறு கோடுகள் போட்டாகிவிட்டது. அதில் துளிர்த்திருக்கும் ரத்தத்தையும் பார்த்தாகிவிட்டது இன்னும் என்ன மிச்சம்? போரடிக்குது இல்லை நரசிம்மா கொஞ்சநேரம் டிவி பார்க்கலாமா உனக்குத்தான் அது பிடிக்குமே ரிமோட் எடுத்துட்டு ஆன் செய்துவிட்டு சுவற்றின் ஓரம் சாத்திவைக்கப்பட்டு இருந்த பிரிட்ஜை திறந்தான்

 

டிவியின் செய்திகளில் கோகைனுக்குப் பதிலாக பிளாக்கா என்னும் போதை மருந்துகள் தமிழ்நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும் சோமாலியா காடுகளில் அவை வளர்க்கப்படுவதாகவும் தகவல்கள் வந்தது. இந்தியாவிற்குள் குறிப்பாக தமிழ்நாட்டிற்குள் அவை ஊடுருவ யார் காரணம் என்று கண்டுபிடிக்கச்சொல்லி காவல்துறையினரை முடுக்கிவிட்டு இருக்கிறார் உள்துறை அமைச்சர். கோக்கைனுக்குப் பதிலாக கொண்டு வரப்பட்ட இந்த போதை மருந்து பயன்படுத்தப்படும் மனிதர்கள் அசாதாரணமான மனிதர்களாக மாறிவிடுகிறார்கள். இதை பயன்படுத்தும் நபரின் உடல் வெப்பநிலை 105 டிகிரிக்கு மேல் சுமார் 3 மணி முதல் 5 மணி நேரம் இருக்கிறது. இதனால் எக்ஸ்டீரிம் தாண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

 

இன்னும் இன்னும் இத்தியாதிகளோடு பிளாக்காவின் புகழைப் பரப்பிக்கொண்டு இருந்தாள் அந்தப்பெண். பிரிட்ஜ்ஜை திறந்தான். அதில் வெறித்த கண்களோடு இறுகிய உடலோடு உறைந்த ரத்தமுமாய் ஏசியின் ஜில்லிப்பினை கிரகித்துக் கொண்ட அவளின் உடல். அலட்சியப்படுத்திவிட்டு அந்த பாட்டிலையும் சிரிஞ்சியினையும் எடுத்து துளி தண்ணீர் கலந்து அதை அவன் புஜத்தில் ஏற்றினான். மெளனமாய் டீப்பாயின் மேல் செங்குத்தாய் நின்றிருந்த மொபைல் போன் நடப்பவற்றை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு இருந்தது. இன்னும் டீவியில் லிப்ஸ்டிக் அணிந்த பெண், மருந்தின் உச்சியில் உடல் சூடு ஏற LED டிவியின் திரையின் மூலம் அவளைச் சிதைத்தான் கற்பனையில் !

ர

 

இன்னும் இன்னும் தொண்டையில் எரிந்த எரிச்சல் மயக்க நிலையோடு ஏறிய போதை வெப்பத்தின் உச்சத்தில் அவன் கைகள் நிலையில்லாமல் தரையில் நீச்சல் அடிப்பவனைப் போல தழைந்தது. கண்ணாடி மீன்தொட்டியில் தலையை நுழைத்தான், அகப்பட்ட மீன்களின் நழுவிய உடல்கள் இரையானது. வெப்பத்தின் வீரியம் அதிகரித்தது. பிணைந்திருந்த கயிற்றில் இருந்து நீக்கப்பட்ட விரல்களில் முளைத்திருந்த சிறு கத்தியால் உடலில் பொத்தல்களைப் போட்டான். விரல்களின் வேகம் அதிகரித்தது. சுகம்சுகம் உடலெங்கும் பரவியது. வடிந்த ரத்தம் அவனை பலவீனமாக்கியிருக்க வேண்டும். இப்போது திரையில் அந்த பெண்மறைந்து ஏதோ பாடல்.....கேட்கப்பட்ட இசை ஒரு வித ஆசுவாசத்தைக் கொடுக்க மீண்டும் பிளாக்காவை உடலில் செலுத்தினான் இம்முறை அதிகமான அளவில்....! 

 

உடல் பறந்தது. சூடேறிய ரத்தம் நரசிம்மனுக்கு இதுவரையில் தன்னை ஆட்டு வித்தவன் யார் என்று உணர்த்தியது. கண்ணாடியில் தெரிந்த அந்த உருவம் மீண்டும் சிரித்தது. இம்முறை அந்த சிரிப்பு நரசிம்மனையும் தொற்றிக்கொள்ள, பால்கனியின் கதவை உடைத்து 13வது மாடியில் இருந்து தலைகுப்புற சாலையை நோக்கி போய்கொண்டே இருந்தான் விஷ்ஷென்ற ஒலியுடன். வெப்பமான ரத்தம் முழுமையும் தரையில் சிதறி பூமியின் உஷ்ணத்தோடு கலந்தது. பிளாக்கா அவனைப் பார்த்து சிரித்து, தன் அடுத்த இரையை நோக்கி கோரப்பற்களுடன் நகர்ந்தது.