தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், சாமியாரிடம் சென்று வசியப்பட்ட கணவருக்கு கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
ஒரு பெண் என்னிடம் வந்தார். நல்ல வாழ்க்கை, குடும்பம், வருமானம் என எல்லாம் சிறப்பானதாக அமைந்திருக்கிறது. ஏதோ ஒரு சாமியார் பேசுவதை கண்டு பிடித்த இந்த பெண்ணின் கணவர், அடிக்கடி அந்த சாமியாரை பார்க்கச் செல்கிறார். இப்படியே அந்த இடத்திற்கு போய் போய், அந்த சாமியார் தங்கியிருக்கும் ஆசிரமத்தில் அங்கேயே தங்கி வாழ முடிவு செய்து கடைசியில் விவகாரத்து வரை சென்றிருக்கிறார். சாமியாரிடம் செல்லும் வரை, தங்களுக்குள் தாம்பத்யம் நன்றாக இருந்தது. ஆனால், இப்போது தாம்பத்யம் என்றால் அது பாவம் என்று கணவர் சொல்கிறார். நன்றாக இருந்த கணவர், சாமியாரோடு சேர்ந்து சாமியார் உடை அணிந்து வித்தியாசமாக பேச ஆரம்பிக்கிறார். அவரை எப்படி வெளியே கொண்டு வருவது என தெரியாம இருக்கிறேன், இது தான் தன்னுடைய பிரச்சனை என்று அவர் சொல்லி முடித்தார்.
நான் கணவரை பார்க்க வேண்டும் என்று கேட்டதற்கு கணவர் வரமாட்டார் என்றார். உடனே, கவுன்சிலரும் இப்படி ஒரு சாமியார் பாதையில் தான் செல்லவிருப்பதாகவும், உங்களை பார்க்க அவர் விருப்பப்படுவதாகவும் கணவரிடம் சொல்லுங்கள் என்றேன். நான் சொன்னதை, அந்த பெண் தன் கணவரிடம் சொல்லி பிறகு அவர் என்னை பார்க்க வந்துவிட்டார். வந்த உடனே, கிட்டத்தட்ட 1 மணி நேரம் ஆன்மீக வாழ்க்கையை பற்றி பாடம் எடுக்கிறார். அவர் அமர்ந்து பேசி கொண்டிருந்த தொனியை பார்க்கும்போது, அவருடைய பிரசங்கத்தை 1000 பேர் கேட்டு கொண்டிருப்பதாக நினைத்து பேசும் உளவியல் டிஸ்டர்பன்ஸில் இருப்பதாக தெரிந்தது. ஆரம்பத்தில் ஏதோ ஒன்றை பேசி, ஒரு 15 நிமிடம் கழித்து சம்பந்தமில்லாத வேறு ஒரு விஷயத்தை பேசிக் கொண்டே இருக்கிறார். அவர் பேசுவதை வைத்து, அந்த சாமியாரும் இப்படி தான் சம்பந்தமில்லாமல் பேசுவார் என்று நான் புரிந்துகொண்டேன். இவரோடு சேர்த்து 15,16 பேர் அந்த சாமியார் பேச்சில் ஈர்க்கப்பட்டு இப்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
எப்போதுமே, அதீத ஈர்ப்புகளை உடைப்பது மிகவும் சுலபமான ஒன்றாகும். கொஞ்ச ஈர்ப்புகளை உடைப்பது மிகவும் சிரமமான ஒன்று. குடும்ப வாழ்க்கை எல்லாம் பாவமான செயல் என்கிறார். குடும்பத்தை விட்டு உங்களுடைய கூட்டத்தில் வந்தாலும் அதே நிலைமையாக தான் இருக்கும், எதற்காக நான் வர வேண்டும். சாமியாருக்கு அடுத்த நிலையில் இருப்பவருக்கு கீழ் தானே நாமும் இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசி சாமியார் மீது உள்ள நெகட்டிவை அவரிடம் இருந்து ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வருகிறேன். பணத்துக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன்? அதற்கு அவர், அந்த சாமியார் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே குறி சொல்கிறார் அதை வைத்து தான் நாங்கள் சாப்பாட்டுக்கு செலவழிக்கிறோம். பணம் படைக்காத மனிதர்களை அந்த சாமியார் பார்ப்பதேயில்லை என்றார். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தான் அந்த சாமியார் கூட்டத்திலும் இருக்கிறது என இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறேன். சாமியார் பக்கம் ஆதரவாக பேச வேண்டும் என்ற மனநிலையிலும், என் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத மனநிலையிலும் இருக்கும் அவர், கொஞ்ச கொஞ்சமாக உடைகிறார்.
இவர்கள் எல்லோரிடம் இருந்தும் பணம் மாதிரியான ஏதோ ஒருவிதத்தில் பொருட்களை வாங்கிக் கொண்டு அந்த சாமியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னை சரிப்படுத்திக் கொள்ளுதல் தான் ஆன்மீகம் என்று நான் சொன்னதற்கு, அவர் ஏதோ ஒன்றை பேசிவிட்டு கடைசியில் நான் பேசியது சரி தான் என்றார். கடைசியில், அந்த சாமியார் வழக்கமான மனிதராக தான் இருக்கிறார், அவர் நன்றாக வாழ்வதற்கு பணம் சம்பாரித்து இடங்களை வாங்கி ஆசிரமம் எல்லாம் கட்டிக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால், நாம் எதையோ இழந்ததுபோல் இருக்கிறதே என்று சொன்னேன். இப்படியே பேசிக்கொண்டிருக்கும் போதே, நீங்கள் எப்போது சாமியார் இடத்திற்கு வரப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் தடுமாறுகிறார்.
சாமியாரோடு பழகி இப்படி பேசியதால் இவருக்கு வேலை போகிறது. இவர் வீட்டில் இருக்காமல் அந்த இடத்திற்கு சென்று சாமியார் இல்லாத நேரத்தில் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். சாமியார் அந்த இடத்தில் இல்லை என்றால், இவருக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. அவர் பேசியதை வைத்து, குடும்பம் இயற்கை பார்த்துக்கொள்ளும் என்றால் சாமியாரை மட்டும் இயற்கை பார்த்துக்கொள்ளாதா? என்று கேட்டேன். அவர் விரும்பும் சாமியார் இடத்தை பற்றி அடிக்கடி பேசிக்கொண்டே இருக்கிறேன். எதை எதை எல்லாம் குடும்பத்தை பற்றி தவறாக பேசிக்கொண்டு இருக்கிறாரோ அதை சாமியார் பக்கம் கனெக்ட் செய்து பேசிக்கொண்டு இருக்கிறேன். கொஞ்ச கொஞ்சமாக உடைந்த நான் பேசுவதில் நியாயம் இருப்பதாகச் சொன்னார். தூய தமிழிலே பேசிக்கொண்டிருந்த அவரிடம் எப்போது இயல்பாக பேசுவீர்கள் என்று கேட்டதோடு அந்த செக்ஷனை முடித்துவிட்டேன்.
கணவரிடம் எதை பற்றியும் கேட்காமல் அமைதியாக இருக்கும்படி அந்த பெண்ணிடம் சொன்னேன். ஒரு வாரம் கழித்து இரண்டு பேரும் வந்தார்கள். மனைவியிடம் இதை பற்றி எதுவும் பேசாமலும், சாமியார் இடத்திற்கு செல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு, கணவர் இயல்பாக பேசி தன்னை அழைத்து கொண்டு வந்ததாக் அந்த பெண்மணி சொன்னார். நான் கேட்ட கேள்வி நிறைய யோசிக்க வைத்ததாகவும், தனியாக அமர்ந்து கவனிக்க ஆரம்பித்த போது தான் சாதாரண விஷயத்தை கூட தூய தமிழில் பேசி இருந்திருக்கிறேன் என்பதை உணர்ந்ததாகவும் அந்த நபர் சொன்னார். தாமாக சென்று வசியப்பட்டதை அவர் புரிந்துகொள்கிறார். ஆறேரழு மாதம் கழித்து அந்த சாமியாரிடம் செல்வதையே நிறுத்திவிட்டு வேறு ஒரு கம்பெனியில் வேலைக்கு செல்கிறார்.