Skip to main content

"ரெண்டு லட்ச ரூபாய் கொடுங்க, எதையும் வெளிய சொல்லமாட்டேன்!" - மிரட்டிய துரோகி! ஆட்டோ சங்கர் #19

Published on 29/09/2018 | Edited on 30/09/2018
auto sankar 19

 

வெறும் மூன்று அங்குல நீளமுள்ள நாக்கு ஆறடி உயர மனிதனையே ஆபத்தில் தள்ளிவிடுகிற வல்லமை பெற்றது! ரவிக்கும் ஆபத்தைத் தந்தது, அந்த நாக்குதான்! சுடலை விஷயத்தில் மறைந்திருக்கும் சிதம்பர ரகசியத்தை அறியத் துடித்தவன், ஒரு நாள் சிவாஜியிடம் கேட்டேவிட்டான்.

"சுடலையைக் கொலை பண்ணினீங்களே.... ஏண்ணே!'' என ரவி கேட்டதும் சிவாஜி மனசுக்குள் ஒரு "திக்' வாங்கினான். மார்பில் முயல் உதைத்தது. பளிச்சென்று நிமிர்ந்தான். கண்களை இடுக்கிக் கொண்டு ரவியைப் பார்த்தான்.

"என்னடா கேட்டே?'' -மெலிதான குரலில் அழுத்தமாய்க் கேட்க ரவி எச்சில் விழுங்கினான்.

"இ... இல்லேண்ணே! சுடலை என்ன தப்பு பண்ணினாரு. எதுக்காக கொ...லை... பண்ணினீங்க...ன்னு...''

அதிர்ச்சியை ஒளித்துவைக்க இதயத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இடம் தேடினான் சிவாஜி.

"என்னடா சொல்றே? சு...சுடலையைக் கொலை பண்ணினேனா... நானா?''

ரவி மரியாதை சேர்த்து சிரித்தான். "உங்களை மட்டும்  சொல்லலைண்ணே... நீங்க எல்லாருமா சேர்ந்துதான்...''-  கூடிய மட்டும்   எச்சரிக்கையாகப் பேசினான் ரவி.

"என்னடா பேமானி... இன்னா தெனாவெட்டு இருந்தா, இப்படி ராங்கா டயலாக் உடுவே...'' -சிவாஜியின் முகம் உக்கிரமானது.

"சொல்ரா... எத்தை வச்சு சுடலைப் பயலுக்கு நாங்க சங்கு ஊதினோம்னு பினாத்துவே... அவனை எத்தினி நாளா தேடிக்கினு இர்க்கோம்! தெர்யாது?'' -ரவியின் சட்டைக் காலரை கொத்தாகப் பற்றினான்.

முதலில் பயந்தாலும் சிவாஜி தன் சட்டையைப் பற்றினதும் தனது வம்ச குடிப்பெருமையே(!) இதில் சேதமடைந்ததுபோல் ஒரு கோபம் கிளம்பிற்று   ரவிக்குள்! கொலையும் செய்துவிட்டு தன்னையும் இவன் அவமானப்படுத்துவதாவது... இவர்களது குடுமியே தன் கையில் சிக்கியிருக்கும்போது,   தன் சட்டையைக் கேவலம் இவன் பிடிப்பதாவது!

பொறுமையின் கடைசிப் படிக்கட்டில் நின்றுகொண்டு அமைதியாக "முதல்ல சட்டையிலிருந்து கையை எடுங்க...''

"முடியாது'' என்றான் சிவாஜி. அவன் சொன்ன அபாண்டத்துக்கு விளக்கம் தரும்வரை விடப்போவதில்லை என தீர்மானமாகச் சொன்னான்.

"சரி... சொல்றேன்! ஒவ்வொன்றா கேட்டுக்குங்க. சுடலை கொடுத்ததா நூறு ரூவா கொடுத்தீங்களே... நான் சுடலைக்குப் பணம்   கொடுக்கவேயில்லை! உங்க கிட்ட பொய் சொன்னேன்.   உபத்திராவும் நானும் எப்பவோ போலீசுக்குப் போயிருப்போம். சரி பழகிட்டோம்னு சமாதானமா கேட்டா, என்னை என்ன கேனயன்னு   நினைச்சுட்டீங்களா? சுடலை மட்டுமில்லை. லலிதாவைக் கொலை பண்ணி புதைச்சதும்கூட தெரியும் எனக்கு...!''

சிவாஜி விக்கித்துப் போய் நின்றான். சட்டையைப் பிடித்திருந்த கைகள் தானாகவே தளர்ந்தது. முகம் பூராவும் முத்து முத்தாய் வியர்வை பூத்தது.

"ஹ...ஹ... என்னடா என்னென்னவோ சொல்றே...?'' -அசட்டுச் சிரிப்புடன் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

"அண்ணே! இந்த வேலையெல்லாம் நம்மகிட்டே வேணாம். இப்ப போலீசுக்குப் போய் சொன்னேன்னா போதும். ம்ஹும்! நம்ம சரகத்திலே   சொல்ல மாட்டேன். இங்கே இருக்கிறவுக போலீஸ்காரனுகளா... பொம்பிளை விபச்சாரிகளை வச்சிருக்கீங்களே... அதேமாதிரி அவனுக உங்களோட ஆம்பிளை வேசிங்க! புகார் கொடுத்தா என்னை கைமாப் பண்ணிடுவானுக, எனக்குத் தெரியாதா? அதனாலே நேரா கமிஷனர்கிட்டேதான் போவேன்.''
 

auto sankar 191சிவாஜிக்கு பகீர் என்றது. ரவியின் மேல் அடங்காத ஆத்திரம் பிறந்தது. குழம்பு கக்கின இதய எரிமலையில் பொறுமை என்னும் தண்ணீரை ஊற்றி ஊற்றி தன்னை அடக்கிக் கொண்டான். மெள்ள சிரித்து சிநேகத்துடன் ரவியின் தோளில் கை போட்டான்.

"த பாரு... இப்ப இன்னா நடந்துச்சுன்னு டென்ஷன் ஆவுறே... ஒனிக்கு இன்னா வேணும்... அத்த சொல்லுவியா... ஹாங்!''

"ம்..ம்.. அப்படி வாங்க வழிக்கு! நான் ஒண்ணும் அதிகமா கேட்டுரல... ரெண்டே ரெண்டு லட்ச ரூபாதான். சுடலைக்கு ஒண்ணு! லலிதாவுக்கு ஒண்ணு! அதை மட்டும் கொடுத்துட்டா எங்கேயும் வாய் திறக்க மாட்டேன்.''

அவன் சொன்னதும் சிவாஜிக்கு முகத்தில் ரத்தம் தப்பித்தது. கண்கள் செந்தூரம் காட்டினது. ரவியைப் பார்த்து ஒரு இன்ச் புன்சிரித்தான். கைகள்  வேட்டியின் மடிப்புக்குள் இருந்த பட்டன் கத்தி நோக்கி அங்குலம் அங்குலமாக நகர்ந்தன. ரவி ஆபத்து உணராதவனாக சவடால் அடித்துக் கொண்டிருந்தான்.

"பணத்தை கொடுத்துட்டீங்கன்னா கண் மறைவா எங்கேயாவது போயிர்றேன். இப்பல்லாம் வேலை செய்யவே   பிடிக்கமாட்டேங்குது. நாலைஞ்சு ஆட்டோவை வாங்கி வாடகைக்கு விட்டுரலாம்னு பார்க்கிறேன். பணம் தரலேன்னு வைங்க... குடிபோதையில   நான் பாட்டுக்கு யார்கிட்டேயாச்சும் இதை உளறி வைப்பேன்!''

அவன் சொல்லச் சொல்ல பேசாது கேட்டுக் கொண்டிருந்தான் சிவாஜி! மௌனத்தையும் சேர்த்து இப்போது அவனிடம் இரண்டு ஆயுதம்.

"நீங்களே யோசிச்சுப் பாருங்க! நான் ஒண்ணும் அதிகமா கேட்டுரலை... இல்லே?'' -பேச்சு சட்டென பாதியில் நின்றது. சிவாஜியின் கையிலிருந்த ஆயுதம் கண்டு கண்களில் சாவு பயம் தொற்றிக் கொண்டது.

சிவாஜியின் பட்டன் கத்தி எவர்சில்வர் கோட்டிங்குடன் டாலடித்தது. ரத்தப்பசியுடன் ரவியைப் பார்த்து "ஹலோ" என்றது.

முந்தைய பகுதி:

உபத்திராவுக்குக் கொடுத்த வாக்கு... ஆட்டோ சங்கர் #18

 

book ad