முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், மகளுக்கு ஏற்பட்ட தொடர்பு பற்றி தந்தை கொடுத்த வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
13 அல்லது 14 வயது சிறுமிக்கு பிரச்சனை இருப்பதாக கூறி தந்தை என்னிடம் வந்தார். ஹார்ஸ் ரைடிங் செல்லும் மகளிடம், 47 வயது கோச் அதிகப்படியாக பேசி நெருக்கமாக பழகுகிறார். ஒரு கட்டத்தில், அந்த கோச்சை திருமணம் செய்துக்கொள்ள மகள் ஆசைப்பட்டு கூற, அதனை கண்டித்தும் மீண்டும் அந்த தொடர்பு இருக்கும் என சந்தேகத்தில் தந்தை என்னிடம் வந்து விஷயத்தைச் சொன்னார். அம்மாவும், அப்பாவும் வேலைக்குச் செல்வதால், சிறுமியை பாட்டி தான் வீட்டில் கவனித்து வருகிறார். யாருடனும் இல்லாததால், அந்த குழந்தையிடம் பேசி பேசி தன்னுடைய கண்ட்ரோலில் கோச் கொண்டு வந்துள்ளார். இந்த விஷயத்தை தெரிந்தக்கொண்ட தந்தை, மகளை கண்டித்துவிட்டு மீண்டும் அந்த கோச்சிங் செண்டருக்கு அனுப்பிருக்கிறார்.
அதன் பின், அந்த கோச்சை பற்றி விசாரித்தோம். வாடகைக்கு எடுத்த பழைய கோச்சிங் செண்டர் இருக்கும் இடத்தின் உரிமையாளரின் மனைவியிடம், மகளிடமும் அந்த கோச் தகாத உறவில் இருந்திருக்கிறார் என்பது தெரியவந்தது. அந்த விஷயம் அந்த உரிமையாளருக்கு தெரிந்ததும், அவர் அந்த இடத்தை காலி செய்ய சொன்ன பின்னால் தான் இந்த புதிய இடத்தில் கோச்சிங் செண்டர் அமைத்திருக்கிறார்கள். அதன் பின், எனது அறிவுரையின்படி, மகளின் செல்போனை அப்பா என்னிடம் கொடுத்தார். அந்த செல்போனில் உள்ள கால் ஹிஸ்டரியை பார்த்தால், அந்த சிறுமி கோச்சிடம் மணிக்கணக்காக பேசியிருக்கிறார். வெவ்வேறு எண்ணிலிருந்து போன் செய்திருக்கும், அந்த நபரை செக் செய்துவிட்டு தந்தையிடம் விவரத்தை கொடுத்தோம்.
மகளை காப்பாற்ற வேண்டுமென்றால், இந்த இடத்தை விட்டு காலி செய்து வேறு இடத்திற்கு போகுமாறு அவரிடம் சொன்னேன். வேறு இடத்திற்கு பிஸ்னஸ் பாதிக்கப்படும் என்பதால், மகள் வீட்டில் இருக்கும் போது யாராவது ஒருவர் அவளை பார்த்துக்கொள்ள முடிவு செய்துவிட்டதாகச் சொன்னார். ஏற்கெனவே, இரண்டு பெண்களுடன் உறவு வைத்திருக்கும் அந்த நபரால், இன்னும் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள், எனவே இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என அவரிடம் சொன்னேன். மகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற அவர் அதனை ஏற்க மறுத்து தயக்கத்தோடு இருந்தார். அவர் விருப்பப்படாததால், நானும் அதை விட்டுவிட்டேன். ஒரு மாதம் கழித்து, திடீரென்று செய்தித் தாளை பார்க்கும் போது இந்த விஷயம் போட்டிருந்தது. அந்த தந்தை போலீஸில் கம்ப்ளைண்டு கொடுத்ததால், அந்த நபரையும், ஓனரையும் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள்.