Skip to main content

பொய்யை உண்மையாக்க பேராசிரியர் செய்த காரியம் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 17

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Detective Malathi's Investigation: 17

 

ஒரு தவறான பேராசிரியர் வழக்கு குறித்து, முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருந்த நேரத்தில் அவளைத் தாய் வீட்டில் கொண்டு வந்து விட்டார் கணவர். இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. மீண்டும் வந்து கணவர் அழைத்துச் செல்வார் எனப் பெண் வீட்டில் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வராமல் சைக்கோ போல் நடந்துகொண்டார். அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர். அவரோடு இனி வாழ முடியாது என விவாகரத்து வழக்கைப் பதிவு செய்தனர். கோர்ட்டில் வந்து தான் தற்போது எந்தப் பணியிலும் இல்லை என்று அவர் பொய் சொன்னார்.

 

நீதிமன்றத்துக்கு ஆதாரம் தேவை. அந்த மனிதருக்கு இன்னொரு குடும்பமும் குழந்தையும் இருந்தது விசாரணையில் தெரிந்தது. அந்தக் குடும்பத்தோடு அவனுக்கு ரேஷன் கார்டே இருந்தது. அவனுடைய குடும்பத்திடம் அப்போதைக்கு நாங்கள் அந்த உண்மையைச் சொல்லவில்லை. அவன் செல்லும் இடங்களில் போட்டோ எடுத்தோம். அதன் பிறகு அவனுடைய குடும்பத்தினரிடம் நாங்கள் உண்மையைத் தெரிவித்தபோது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இது குறித்தும் அவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசாரால் அவன் கைது செய்யப்பட்டான்.

 

தன்னைப் போலீசார் கொலை செய்ய வருகின்றனர் என்று அவன் தரையில் படுத்து உருண்டு டிராமா செய்தான். ஆனாலும் அவன் சிறையில் அடைக்கப்பட்டான். அவனுடைய அண்ணா பல்கலைக்கழக பணி குறித்த ஆதாரங்களும் நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தன. தன்னுடைய குடும்பத்துக்கு பணம் கொடுக்கக் கூடாது என்கிற காரணத்திற்காக அவன் தன்னுடைய பணியையே ராஜினாமா செய்தான். இப்படியும் ஒரு மனிதன் இருப்பானா என்று இந்த வழக்கு என்னை யோசிக்க வைத்தது. 

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை கிடைப்பது பெரிய விஷயம். குடும்பத்துக்கு பணம் கொடுக்கக் கூடாது என்பதற்காக அதையே அவன் ராஜினாமா செய்தான். இதுபோன்ற ஒரு தவறான ஆசிரியர் தன் வேலையை ராஜினாமா செய்தது ஒரு வகையில் எனக்கு சந்தோஷம்தான். மாணவர்கள் ஒரு தவறான ஆசிரியரிடமிருந்து தப்பித்தனர் என்பதில் உண்மையிலேயே மகிழ்ச்சி. இதுபோன்ற வழக்குகளில் எங்களுடைய துப்பறியும் பணி நீதித்துறைக்கும் பயன் தருவதாக அமையும்.