‘வீட்டைக் கட்டிப் பார். கல்யாணம் பண்ணிப்பார்' என்பார்கள். நம் நாட்டில் திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய திருவிழா. மிகுந்த பொருட்செலவோடும் மனநிறைவோடும் நடத்தி வைக்கப்படும் திருமணங்கள் அனைத்துமே வெற்றிகரமாக அமைந்து விடுவதில்லை. பல்வேறு வேறுபாடுகள் காரணமாக நீதிமன்றத்தின் கதவைத் தட்டுபவர்கள் ஏராளம். அப்படி தன்னிடம் வந்த வழக்குகள் குறித்து குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு மனம் திறக்கிறார்.
ஒருமுறை மருத்துவமனை சென்றிருந்தபோது ஒரு பெண்ணைச் சந்தித்தேன். நான் வழக்கறிஞர் என்பதை அறிந்ததும் அந்தப் பெண்ணின் தோழி "நீங்கள் இந்தப் பெண்ணிற்கு ஏதாவது உதவி செய்யுங்கள் மேடம்" என்றாள். ஆனாலும் பயத்தினால் அந்தப் பெண் என்னை வந்து சந்திக்கவே இல்லை. அதன் பிறகு அந்தப் பெண்ணை அழைத்துப் பேசினேன். முரளி என்கிற பையனை இந்தப் பெண் ஒரு திருமண விழாவில் சந்தித்திருக்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் விரும்பியுள்ளனர். அடிக்கடி சந்தித்துப் பழகிய பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்தனர். பெண் கிறிஸ்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் பெண் வீட்டார் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பிறகு பதிவுத் திருமணமும் நடைபெற்றுள்ளது. முதலிரவின்போது "இன்றைக்கு வேண்டாம். நான் களைப்பாக இருக்கிறேன்" என்கிறான் முரளி. இது இயல்பான ஒன்றுதான் என்று அப்போது அவள் நினைக்கிறாள். ஆனால் இதுவே தினமும் தொடர்கதையாக இருந்துள்ளது.
என்னவென்று புரியாமல் இதுகுறித்து முரளியின் அக்காவிடம் விசாரித்தாள். சிறுவயதில் இருந்து பெண்ணாக வாழ்ந்த அவன், பருவம் வரும்போது ஆணுக்கான உணர்ச்சிகளைப் பெற்றான், இதற்கான அறுவை சிகிச்சையையும் அவன் செய்துள்ளான் என்கிற அதிர்ச்சியான செய்தியை அவனுடைய அக்கா கூறினாள். தான் ஒரு திருநம்பி என்கிற செய்தியை ஏன் அவன் தன்னிடம் மறைத்தான் என்கிற கேள்வி அவளுக்கு எழுந்தது. தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு கூறிய அவன், அதன் பிறகு வீட்டிற்கு வருவதையே தவிர்த்தான். திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது இந்த சமுதாயத்தில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. எனவே அதுபற்றிய புரிதல் திருமணத்திற்கு முன்பே ஏற்பட வேண்டியது அவசியம். எனவே இந்தத் திருமணமே செல்லாது என்று வழக்கு தொடுத்தோம். இதுபோன்ற ஒரு வழக்கு என்னிடம் வந்தது அதுதான் முதல் முறை. இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்தது இது. திருமணத்திற்குத் தேவையான நேர்மை இந்தத் திருமணத்தில் இல்லை. எனவே இது ஒரு மோசடி.
அந்தப் பையன் வழக்கில் ஆஜராகாததால் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. தற்போது அவள் மறுமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறாள். இதுபோல பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் தைரியமாக வெளியே வர வேண்டும். பிரச்சனை தோன்றுகிறபோதே நம்மிடம் வந்துவிட்டால் சரியான நீதியை விரைவில் பெற்றுவிடலாம். நான் சொன்ன வழக்கு நீதிபதிக்கே ஆச்சரியமாக அமைந்த ஒன்று.