Skip to main content

காயங்கள் வாழ்வின் அங்கம்! - தங்க மங்கை வினேஷ் போகாத் உருக்கம்

Published on 21/08/2018 | Edited on 21/08/2018

காயங்களும் விளையாட்டு வீரர்களின் ஒரு அங்கம்தான் என ஆசிய மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகாத் உருக்கமாக தெரிவித்துள்ளார். 


 

vinesh

 

 

 

18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனிஷியாவின் ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் துப்பாக்கிச்சூடு பிரிவில் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். மல்யுத்தப் போட்டியில் ஆடவர் 65 கிலோ பிரிவில் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார். அதேபோல், மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த யூகியைத் தோற்கடித்து வினேஷ் போகாத் தங்கம் வென்றார். குறிப்பாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தப் பிரிவில் இந்திய மகளிர் தங்கம் வெல்வது இதுவே முதன்முறை என்பதால், இது மகத்தான சாதனையாக கொண்டாடப்படுகிறது.
 

 

 

இதுகுறித்து பேசியுள்ள வினேஷ் போகாத், “தங்கம் வெல்வது மட்டுமே என் இலக்காக இருந்தது. இதற்கு முன்னர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தாலும், தங்கம் வென்றாக வேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் இருந்தேன். என் உடல் அதற்கு ஏற்றாற்போல் ஒத்துழைத்தது. எனது பயிற்சி உத்வேகம் அளித்திருந்தது. காயங்கள் விளையாட்டு வீரர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகும். எனக்கும் வாழ்வில் நிறைய காயங்கள் உண்டு. அது உடல் மற்றும் மனரீதியிலும் ஏற்படுத்திய மாற்றங்கள், இன்றளவும் என்னை வலுவாக உணரச் செய்கிறது” என உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.