Skip to main content

தோனி வந்தாலும் சச்சின் வந்தாலும் ஷேவாக் கிடைப்பது அரிது...

Published on 20/10/2018 | Edited on 20/10/2020

 

ss

 

மீம்ஸ்களில் வருவதுபோல் உண்மையில் 90-ஸ் கிட்ஸ் பார்த்து இரசித்த சில பொன்னான விஷயங்களையும் நிகழ்வுகளையும் இன்றைய தலைமுறையினர் பார்ப்பதற்கும் அனுபவிப்பதற்கும் விதிவிலக்கு பெற்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இது வேறு எந்த விஷயத்துக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயம் கிரிக்கெட்டிற்குப் பொருந்தும்.

 

1999-ல் வீரேந்திர ஷேவாக் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகம் ஆவதற்கு முன்புவரை ஒரு பேட்ஸ்மேன் மைதானத்திற்குள் பேட்டிங் செய்ய வந்தால், குறைந்தபட்சம் இரண்டு பந்துகளையாவது தட்டி விளையாடிவிட்டு அதன்பிறகுதான் அடித்து ஆடத் துவங்குவார்கள். 1999-ல்  வீரேந்திர ஷேவாக் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிறார். அதுவரை இருந்த ஆட்ட பாணியை மாற்றி, மைதானத்திற்கு வந்த முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடும் பாணியை அறிமுகம் செய்தார். ஷேவாக் விளையாடிய முதல் ஒரு நாள் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிரானது என்பது வேறொரு சிறப்பு. இவரின் அறிமுகத்துடனும் ஆட்ட பாணியுடனும் சேர்த்து இன்னொரு சாதனையும் படைத்தார்.

 

1999-ல் பாகிஸ்தானுக்கு எதிராக தான் விளையாடிய முதல் ஒரு நாள் போட்டியில் சதம் விளாசி மொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தவர். 2001-ஆம் ஆண்டு, தன் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தென் ஆப்பிரிக்காவுடன் எதிர்கொள்கிறார், அதில் 173 பந்துகளை எதிர்கொண்ட ஷேவாக் 105 ரன்களை எடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரசிகர்களை ஒரு நாள் கிரிக்கெட்டை போல் ரசிக்க வைத்தார். இந்த ஆட்டத்தில் அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகக் களம் இறங்கினார். இவரின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்த அன்றைய இந்திய அணி கேப்டன் கங்குலி, இரண்டு ஆட்டங்களுக்குப் பின் ஷேவாக்கை தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கச் செய்தார். முக்கியமாக ஷேவாக்கிடம் அனைவரும் பார்த்து அதிசயத்த விஷயம், எந்த நிலையிலும் அமைதியாக இருப்பது. இன்று தோனியின் ’கூல் அண்ட் காம்’ எப்டியோ அதுபோல் அன்று ஷேவாகின் 'கூல் அண்ட் காம்'.

 

இதைப் பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஷேவாக், 'தனது சிறு வயதில் தன் தாய் தந்தை சொல்லித் தந்த விஷயம்தான் கூல் அண்ட் காம்' என்றார். மேலும், 'எவ்வளவு இக்கட்டான இடத்தில் இருந்தாலும் ஒரு குறுஞ்சிரிப்புடன் இரு, அது உன் பலத்தையும் உன் உடன் இருப்போரின் பலத்தையும் கூட்டும்' என்று சொன்னதாக அப்பேட்டியில் தெரிவித்திருந்தார். இதுபற்றி ’மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சினும்கூட ஒரு முறை "90களில் இருக்கும்போது எப்படிப் பதட்டம் இல்லாமல் ஆடுவது என்று ஷேவாக்கிடம்தான், நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ, "ஒரு பந்துவீச்சாளர் எவ்வளவு அனுபவசாலியாகவும் திறமையானவராகவும் இருந்தாலும் ஷேவாக் உங்களின் அணுகுமுறையைக் கொன்றுவிடுவார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

 

ss

 

ஷேவாக் இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் இருபத்தி மூன்று சதங்களுடன் 8,586 ரன்களையும், 251 ஒரு நாள் போட்டிகளில் பதினைந்து சதங்களுடன் 8,251 ரன்களையும் குவித்துள்ளார். இத்தனை சாதனைகளுடன் ஷேவாக்கின் மிகமுக்கியமான சாதனை 2004-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 375 பந்துகளில் 39 ஃபோர்கள் 6 சிக்ஸர்களுடன் 309 ரன்களை எடுத்து, 'முதல் 300 அடித்த இந்திய வீரர்' என்று இந்திய அணிக்குப் பெருமை சேர்த்தார். அத்தோடு நில்லாமல் 2008-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகச் சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 319 ரன்களை எடுத்தார். ஷேவாக் எந்த அணிகளுக்கு எதிராகத் தனது சர்வதேச ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தொடங்கினாரோ அதே அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் சதத்தையும், முந்நூறுகளையும் விளாசியுள்ளார் என்பது கவனிக்கவேண்டியது.

 

Ad

 

தோனி எப்படி பெஸ்ட் பினிஷெர் என்று அழைக்கப்படுகிறாரோ அதுபோல் ஷேவாக் தனது சதங்களை, பௌண்டரிகள் மூலமாக எட்டுவதில் வல்லவர். முக்கியமாகத் தனது முதல் 300 ரன்களை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிக்ஸரை அடித்துதான் எட்டினார். கிரிக்கெட்டில் ஃபிளாட் டிராக் (Flat Track) மற்றும் க்ரீன் டிராக் (Green Track) என்று இரண்டு விதமான மைதானங்கள் உள்ளது. இதில் ஃபிளாட் டிராக் மைதானம் பேட்ஸ்மேன்களின் தோழன் என்றும் க்ரீன் டிராக் மைதானம் பந்துவீச்சாளர்களின் தோழன் என்றும் சொல்லுவார்கள். ஃபிளாட் டிராக் மைதானத்தில் சிறப்பாக விளையாடும் பேட்ஸ்மேனால் க்ரீன் டிராக் மைதானத்தில் விளையாட முடியாது. ஆனால், ஷேவாக் இந்த இரண்டு விதமான டிராக்கிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர். குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் க்ரீன் டிராக் மைதான நாடுகள். இந்த நாடுகளில் ஷேவாக் 56 இன்னிங்ஸில் நான்கு சதங்களையும் ஏழு அரைச் சதங்களையும் அடித்து, மொத்தம் 1,900 ரன்களைக் குவித்துள்ளார்.

 

ss

 

 

எப்போதும் 'இந்தியா - பாகிஸ்தான்' போட்டி என்றால் அது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு தனி விருந்து. அதில் டெஸ்ட் போட்டிகளில் ஷேவாக்கின் பங்கு என்று எடுத்துக்கொண்டால் அவர் ஒய்வு பெறுவதற்கு முன்புவரை ஒன்பது டெஸ்ட் போட்டிகளில், ஒரு முந்நூறு, இரண்டு இரட்டை சதம், ஒரு ஆட்டத்தில் 150 ரன்கள் எடுத்து மொத்தம் 1,276 ரன்களை எடுத்துள்ளார். இவரின் 'அப்பர் கட்' ஸ்டைலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. எந்த பந்து வீச்சாளரையும் சிதறடிக்கும் ஷேவாக் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் 'க்ளென் மெக்ராத்' மற்றும் இலங்கை சுழற் பந்துவீச்சாளர் ’முத்தையாமுரளிதரன்’ ஆகிய இருவரின் பந்துவீச்சையும் எதிர்கொள்ளும்போது கொஞ்சம் அச்சப்படுவேன் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

 

Nakkheeran

 

ஆரம்ப பந்திலே பௌண்டரி, எந்த பந்துவீச்சாளர் பந்தையும் தைரியமாகவும் அமைதியாகவும் எதிர்கொள்ளும் 'அதிரடி நாயகன்' வீரேந்திர ஷேவாக்கின் பிறந்தநாள் இன்று. தனது 37-ஆவது வயது பிறந்த நாளன்று சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்து இவரின் ரசிகர்களுக்கு மாபெரும் அதிர்ச்சியைத் தந்தார். இந்திய அணிக்கு எத்தனை தோனி வந்தாலும் எத்தனை சச்சின் வந்தாலும், முதல் பந்தில் இருந்தே பந்துகளை பௌண்டரிகளை நோக்கி விரட்டும் ஷேவாக் கிடைப்பது அரிது...