இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரிலிருந்து தமிழகத்தை சேர்ந்த இந்திய அணி வீரர் விஜய் சங்கர் வெளியேறியுள்ளார்.
கடந்த வாரம் வலைப்பயிற்சியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய பந்து விஜய் சங்கரின் கணுக்காலில் அடித்தது. இதனால் காயமடைந்த அவர் உடனடியாக முதலுதவிக்கு உட்படுத்தப்பட்டார். எனினும் அதற்கு அடுத்து நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார்.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் இவர் விளையாடவில்லை. இவருக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது காயம் காரணமாக விஜய் சங்கர் உலகக்கோப்பையிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வலைப்பயிற்சியின்போது மீண்டும் பும்ரா வீசிய யார்கரில் விஜய் சங்கர் காயமடைந்ததால், அவர் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், " வலைப்பயிற்சியின் போது பும்ரா வீசிய யார்கர் பந்துவீச்சில் விஜய் சங்கர் மீண்டும் காயமடைந்தார். விஜய் சங்கரின் உடல்நிலை தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு தகுதியானதாக இல்லை. ஆதலால், அவர் இந்தியாவுக்கு திரும்பிச் செல்கிறார்" என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது நிலைப்படி விஜய் சங்கருக்கு பதிலாக மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சங்கரின் இந்த ஓய்வு அறிவிப்பு தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.