கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஷாகிப் அல் ஹசன், காளி பூஜையில் கலந்து கொண்டது தொடர்பாக அவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான ஷாகிப் அல் ஹசன், கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தா வந்தடைந்தார். பின், அவர் கொல்கத்தாவில் நடைபெற்ற காளி பூஜையில் கலந்து கொண்டார். அதனையடுத்து, காளி பூஜையை ஷாகிப் அல் ஹசன் தொடங்கிவைத்தார் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் பரவியது.
பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த ஷாகிப் அல் ஹசன், "ஊடகங்கள், சமூக வலைதளங்களில் நான் காளி பூஜையை தொடங்கி வைப்பதற்காக கொல்கத்தா சென்றேன் என செய்திகள் பரவுகின்றன. நான் அதற்காக கொல்கத்தா செல்லவில்லை. கொல்கத்தாவின் மேயரான ஃபிர்ஹாத் ஹக்கீம்தான் காளி பூஜையை தொடங்கி வைத்தார். பூஜை நடந்த மேடைக்கு அருகில் என்னுடைய நிகழ்ச்சி நடைபெற்றது. பிற வழிகள் அடைக்கப்பட்டிருந்ததால், விழா முடிந்து என் காருக்கு நான் அந்த வழியாக செல்ல வேண்டியிருந்தது. அங்கிருந்தவர்கள் என்னை அடையாளம் கண்டு, வேண்டுகோள் விடுத்தனர். அதன்பிறகு மெழுகுவர்த்தி மட்டும் ஏற்றினேன். அது தவறு என்பதை உணர்கிறேன்" எனக் கூறினார்.
இந்நிலையில், கையில் பெரிய ஆயுதத்துடன் முகநூல் நேரலையில் தோன்றிய வங்காளதேசத்தைச் சேர்ந்த மொசின் தலுக்தர் என்ற இளைஞர், மதநம்பிக்கையை ஷாகிப் அல் ஹசன் புண்படுத்திவிட்டார் என்று கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்ற நிலையில், கொலை மிரட்டல் விடுத்த மொசின் தலுக்தர் என்ற இளைஞரை டாக்கா போலீசார் கைது செய்தனர்.