கடந்த முறை டெஸ்ட் தொடரை இழந்தது இன்னும் என்னை எரிச்சலூட்டுகிறது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான டிம் பெயின் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.
இந்திய அணி கடந்த முறை ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததையடுத்து, அவ்வணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான டிம் பெயின் கடந்த டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.
அதில் அவர், "கடந்த முறை டெஸ்ட் தொடரை இழந்தது இன்னும் என்னை எரிச்சலூட்டுகிறது. ஸ்மித், வார்னர் அணியில் இருக்கிறார்களோ இல்லையோ, நாம் விளையாடுகிற போட்டியில் தோற்கக் கூடாது என்றுதான் விரும்புவோம். ஆகையால், அது கொஞ்சம் வருத்தம் தரும். தற்போதைய அணி அனைத்திலும் சிறப்பாக உள்ளது. ஸ்மித், வார்னர் அணிக்கு திரும்பியது மட்டுமல்ல, மற்ற அனைத்து வீரர்களும் கடந்த 18 மாதங்களில் தங்களை மேம்படுத்திக்கொண்டனர். நாங்கள் சில நல்ல கிரிக்கெட் போட்டிகளையும் விளையாடி இருக்கிறோம்" எனக் கூறினார்.