இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டி20 தொடரில் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியிலும் இலங்கை அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற சுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி கூட்டணி அமைத்து ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தனர். 5 ஓவர்களில் 50 ரன்களை எட்டிய நிலையில், ராகுல் திரிபாதி 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் தனது பேட்டை சுழற்ற அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
16 ஓவர்களில் இந்திய அணி 163 ரன்களை எட்டிய நிலையில் சுப்மன் கில் 46 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் சதமடித்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 228 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 112 ரன்களை எடுத்தார். அதில் 7 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடக்கம்.
இதன் பின் இமாலய இலக்கைக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணியில் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இலங்கை அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், உம்ரான் மாலிக், சாஹல், பாண்டியா தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரையும் வென்றது. ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ்வும் தொடர் நாயகனாக அக்ஷர் படேலும் தேர்வு செய்யப்பட்டனர்.