இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்று விளையாடுகிறது.
இதற்கான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, இரண்டாவது போட்டி ஜனவரி 21 இல் ராய்ப்பூரிலும், மூன்றாவது போட்டி ஜனவரி 24 இல் இந்தூரிலும் நடைபெற உள்ளன.
இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் கூட்டணி நிலையாக ரன்களை சேர்த்தது. ரோஹித் சர்மா 34 ரன்களில் வெளியேற அடுத்து வந்த வீரர்களான விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையைக்கட்டினர்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ்வுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். நிலையாக ஆடி ரன்களை சேர்த்த இந்த ஜோடி 65 ரன்களை சேர்த்த நிலையில், 31 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் அவுட்டானார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய சுப்மன் கில் சதமடித்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் சுப்மன் கில் தனது 3 ஆவது சதத்தை பதிவு செய்தார். 19 இன்னிங்ஸில் ஆடியுள்ள சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் வேகமாக 1000 ரன்களை அடித்த வீரர் என்ற பட்டியலில் இமாம் உல் ஹக் உடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சுப்மன் கில்லுக்கு முன் முதல் இடத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபக்கர் ஜமான் உள்ளார். இவர் 1000 ரன்களை அடிக்க 18 இன்னிங்ஸ்கள் எடுத்துக்கொண்டார். இப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் இங்கிலாந்தை சேர்ந்த கெவின் பீட்டர்சன், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டிகாக் ஆகியோர் உள்ளனர். இவர்கள் 1000 ரன்களை அடிக்க 21 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை விராட் கோலி மற்றும் ஷிகர் தவன் 1000 ரன்களை அடிக்க 24 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.