Skip to main content

20 ஓவர் உலகக்கோப்பை அணியில் தொடர்வாரா ஹர்திக் பாண்டியா? - விரைவில் முடிவெடுக்கும் தேர்வுக்குழு!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

hardik shardhul deepak chahar

 

2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை, வரும் அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில், இருபது ஓவர் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களில் சிலர், தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை.

 

இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுக்குழு, கடந்த சனிக்கிழமை (09.10.2021) அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோருடன் விவாதிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் பிசிசிஐ அதிகாரி இத்தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த அதிகாரி, "அதிகாரபூர்வ சந்திப்பு நடைபெறாது. அணியில் உள்ள வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாலேயன்றி, அறிவிக்கப்பட்ட அணியில் மாற்றம் செய்யப்படாது" என தெரிவித்தார்.

 

இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா பந்து வீசாததால், அவரை நீக்கிவிட்டு வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை அணியில் சேர்ப்பது குறித்து அடுத்த சில நாட்களில் தேர்வுக்குழு முடிவு செய்யவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒருவேளை ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டால் ஷார்துல் தாகூர் அல்லது தீபக் சாஹர் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ள வட்டாரங்கள், ஷார்துல் தாகூர் அண்மைக்காலமாக பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவதையும், இலங்கையில் தனது பேட்டிங்கால் இந்திய அணிக்கு ஒரு போட்டியை தீபக் சாஹர் வென்று கொடுத்ததையும் சுட்டிக்காட்டுகின்றன.

 

தேர்வு செய்யப்பட்ட அணிகளில் மாற்றம் செய்ய அக்டோபர் 10ஆம் தேதியே கடைசி நாள் என கருதப்பட்டது. ஆனால் அது தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு மட்டுமே என தற்போது தெரிவித்துள்ள ஐசிசி வட்டாரங்கள், தகுதிச் சுற்றில் விளையாடாமல் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் இந்தியா விளையாடுவதால், அச்சுற்று தொடங்குவதற்கு ஏழு நாட்கள் முன்புவரை இந்திய அணியில் மாற்றங்கள் செய்யலாம் என தெரிவித்துள்ளன.

 

அதன்படி சூப்பர் 12 சுற்று அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கவுள்ளதால், எனவே வரும் 15ஆம் தேதிவரை இந்திய அணியில் மாற்றம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஹர்திக் பாண்டியா அடுத்த வாரத்தில் பந்து வீச தொடங்கலாம் என சன் ரைசர்ஸ் அணியுடனான ஐபிஎல் போட்டிக்குப் பிறகு ரோஹித் ஷர்மா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.