
சென்னையில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மத்திய அரசு ஏதோ பல தடைகளை கொண்டு தடுத்துக் கொண்டிருக்கிறது போல் முதல்வர் பேசுகிறார். ஏதோ தினம் தினம் மத்திய அரசு இவர்களை ஆட்சி நடத்த விடாமல் தடுத்துக் கொண்டிருப்பதை போல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார். இன்று திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் ஏறக்குறைய ஒன்பது பேர் மேல் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. யார் அரசாங்கத்திற்கு தடையாக இருக்கிறார்கள்?. ஊழல் குற்றச்சாட்டு என்றால் இவர்கள் சுரண்டிய பணம் யாருடையது?. தமிழக மக்களுடையது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசிடம் இருந்து நிதி எங்கே? நிதி எங்கே? என்று கேட்டால் இவர்கள் சுருட்டிய பணத்தை எடுத்து பார்த்தால் அதைவிட அதிகமாக இருக்கும்.
நீங்கள் ஆட்சிக்கு வருவது எதற்காக என்றால் மக்களின் பணத்தை சுரண்டுவதற்காக. இங்கே காஷ்மீராக விடமாட்டோம் என்று சொல்கிறார். அது மக்களின் நல்ல எண்ணம். மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று இந்து மக்கள் எந்த இடத்திலும் புறக்கணிக்கப்படவில்லை. ஆனால், ஒரு விழாவுக்கு கூட வாழ்த்து சொல்லக் கூடாத அளவிற்கு மத வேற்றுமையை விதைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர். தமிழக மக்கள் முறியடிப்பார்கள் என்றால் திமுகவை முறியடிப்பார்கள்” என்று கூறினார்.
இந்த நிலையில், தமிழிசை செளந்தரராஜன் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கொளத்தூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், 200 தொகுதிகளில் வெல்வோம் என்று சொல்லி இருக்கிறீர்களே? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அதை விட அதிகமாகவே வெல்வோம்” என்று தெரிவித்தார். இதையடுத்து, திமுக அமைச்சர்கள் தான் மக்கள் வரிப்பணத்தை சூறையாடுறாங்க என்று தமிழிசை சௌந்தரராஜன் சொல்லிருக்காங்க என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அவங்களுக்கு வேற வேலை கிடையாது. அதனால் அப்படி சொல்லிட்டு இருக்காங்க” என்று தெரிவித்தார்.