Skip to main content

அனைத்து அணிகளும் தோனியைப் போன்ற வீரரை எதிர்பார்க்கின்றனர்... -சஞ்சு சாம்சன்

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

sanju samson

 

 

அனைத்து அணிகளும் தங்கள் விக்கெட் கீப்பர் தோனியைப் போல செயல்பட வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர் என ராஜஸ்தான் அணி வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

 

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் நான்காவது நாளான நேற்றைய முன்தினம் நடைபெற்ற போட்டியில், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்போட்டியில், தோனியின் பேட்டிங் மற்றும் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. 

 

ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 74 ரன்களைக் குவித்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. தோனியின் ஓய்விற்கு பிறகான இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

 

அதற்கு அவர் பதிலளிக்கையில், "தோனியின் இடத்தை நிரப்புவது என்பது கடினமானது. விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் அவர் ஒரு சாதனையை எட்டியுள்ளார். உலகில் உள்ள அனைத்து அணிகளும், தங்கள் விக்கெட் கீப்பர் தோனியை போல செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்திய அணியில் அந்த இடத்தை நிரப்புவதற்கு கடும் போட்டி நிலவுகிறது, இது ஆரோக்கியமான சூழல்தான். யார் அந்த இடத்திற்கு வந்தாலும் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும். யாரை தேர்ந்தெடுப்பது என்பது அணி நிர்வாகத்திற்கு பெரிய தலைவலியாக இருக்கும். இது போன்ற போட்டி வீரர்கள் திறமையை மெருகேற்ற உதவும். இது அணிக்கு நீண்ட கால பயனை தரும்" என பதிலளித்தார்.