இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் தமிழில் ட்வீட் மூலம் உதவி கேட்டுள்ளது வைரலாகி வருகிறது.
தனது பழைய நினைவுகள் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்ட சச்சின், சென்னை டெஸ்ட் தொடரின்போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் சச்சின் தங்கியிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் சொன்ன ஆலோசனைதான் அவரது கிரிக்கெட் ஆட்ட முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்ததாக கூறியுள்ளார். மேலும் அந்த ரசிகரை சந்திக்க விரும்புவதாகவும், அதற்காக அவரை கண்டுபிடிக்க ரசிகர்கள் உதவ வேண்டும் எனவும் கூறி அதற்காக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
ரசிகருடான அந்த சந்திப்பு குறித்து பேசியுள்ள சச்சின், "சென்னை டெஸ்ட் தொடரின்போது நான் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அப்போது ஹோட்டலில் காபி ஆர்டர் செய்தேன். அந்த காபியை என் அறைக்கு எடுத்துவந்த ஹோட்டல் ஊழியர், உங்களிடம் கிரிக்கெட் தொடர்பாக ஆலோசிக்கலாமா என கேட்டார். நானும் சரி, சொல்லுங்கள் என்றேன்."நான் உங்கள் ரசிகன். உங்கள் பேட்டிங் ஸ்டைலை பிடிக்கும். நீங்கள் எப்போதும் பேட்டிங் பிடிக்கும்போது கையில் உள்ள எல்போ கார்டு சிரமத்தை தருகிறது. அதை ரீ டிசைன் செய்தால் நன்றாக இருக்கும்" என்றார்.
இந்த உலகில் வேறு யாருமே என்னிடம் அதனை கூறவில்லை. அவர் மட்டும் தான் கூறினார். அதன்பின்தான் எனது எல்போ கார்டின் வடிவமைப்பை மாற்றினேன்" என கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்" என கோரியுள்ளார்.