Skip to main content

"அடுத்த 4 நாட்களில் ரோகித் ஷர்மா ஆஸ்திரேலியா வரவில்லையென்றால்..." -பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

Ravi Shastri

 

 

அடுத்த 4 நாட்களில் ரோகித் ஷர்மா ஆஸ்திரேலியா வரவில்லையென்றால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினமாகிவிடும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள்,3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. காயம் காரணமாக ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடர்களில் இடம் பெறாத ரோகித் ஷர்மா, டெஸ்ட் தொடரில் மட்டும் பங்கெடுக்க இருக்கிறார். தற்போது பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கியுள்ள ரோகித் ஷர்மா உடற்தகுதியை மேம்படுத்தும் முனைப்பில் உள்ளார். 

 

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி இது குறித்துப் பேசுகையில், "ரோகித் ஷர்மா தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிக்கும் சோதனைகளில் ஈடுபட்டுள்ளார். அவர் இன்னும் எவ்வளவு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள். அவர் இன்னும் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தால் சிக்கலாகிவிடும். ஓய்விற்குப் பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் உள்ளது. ஆகையால், நீண்ட நாள் ஓய்வும் வழங்க முடியாது. டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டுமென்றால் அடுத்த 3-4 நாட்களில் அவர் ஆஸ்திரேலியா வரவேண்டும். இல்லையென்றால் மிகவும் கடினமாகிவிடும்" எனக் கூறினார்.

 

இதன்மூலம் டெஸ்ட் அணியில் இடம் பிடித்து, காயம் காரணமாக இன்னும் ஆஸ்திரேலியா புறப்படாத இந்திய அணியின் மற்றொரு வீரரான இஷாந்த் ஷர்மாவும் விரைவில் ஆஸ்திரேலியா புறப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.