இலங்கையில் நடைபெற்ற தொடரில் வங்காளதேசம் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் கண்ணாடியை உடைத்த வீரர் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் நடைபெற்ற நிடஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு தொடரின் போது, இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பைப் பெறும் என்பதால், ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை 160 ரன்களை வங்காளதேசம் அணிக்கான இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவதாக களமிறங்கிய வங்காளதேசம் அணி, கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுக்கவேண்டி இருந்தது. கடைசி ஓவரை வீசிய இசாரா உதானா முதல் இரண்டு பந்துகளை முஸ்தபிஜூர் ரஹுமானின் தோள்பட்டைக்கு மேல் வீசினார். ஆனாலும் நடுவர் அதற்கு நோ-பால் தராமல் இருந்தார்.
அப்போது வங்காளதேசம் அணியின் கேப்டன் ஷகிப்-அல்-ஹசான் களத்தில் இருக்கும் வீரர்களை திரும்ப அழைத்தார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து முகமதுல்லா வங்காளதேசம் அணியை ஜெயிக்க வைத்தார். வெற்றி உற்சாகத்தைக் கொண்டாட களத்திற்குள் வந்த அந்த அணி வீரர்கள் பாம்பு நடனம் ஆடினர். மேலும், இரண்டு அணி வீரர்களும் வாய்ச்சண்டை போட்டுக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வீரர்களின் இந்த சண்டை பலரையும் முகம் சுழிக்கவைத்தது.
இது ஒருபுறம் இருந்தாலும், வங்காளதேசம் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் கண்ணாடி சிதறிக்கிடந்தது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. அதை உடைத்த வீரர் யாராக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் கேட்டரிங் பணியாளர்களின் வாக்குமூலம் உள்ளிட்டவற்றின் மூலம் அதை உடைத்த வீரர் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றி பறிபோய்விடுமோ என்ற ஆத்திரத்தில் இருந்த ஷகிப்-அல்-ஹசான் அதை உடைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே, மைதானத்தில் ஏற்பட்ட பரபரப்பிற்காக ஷகிப்-அல்-ஹசான் மீது போட்டி வருமானத்தில் இருந்து 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்காக அவருக்கு என்ன தண்டனை விதிக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.