Skip to main content

பாரா ஒலிம்பிக்; தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் பதக்கம் வென்று அசத்தல்!

Published on 02/09/2024 | Edited on 02/09/2024
Para Olympics; The players from Tamil Nadu won medals and were amazing
துளசிமதி முருகேசன்

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அதில் இந்தியா சார்பில் 84 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வாலும் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். மேலும் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இறுதிப்போட்டியில் 8 வீராங்கனைகள் பங்கேற்ற போட்டியில், இந்திய வீராங்கனை ரூபினா 211.1 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதன் தொடர்ச்சியாக பிரீத்தி பால் வெண்கல பதக்கம், ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் நிஷார் குமார்ஜே வெள்ளிப் பதக்கம் எனத் தொடர்ந்து இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். இதனையடுத்து ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார் இன்று (02.09.2024) தங்கப் பதக்கம் வென்றார். இவர் பிரிட்டன் வீரர் டேனியல் பெதெல்லை 21க்கு 14, 18க்கு 21, 23க்கு 21 செட் கணக்கில் வீழ்த்தி அபார சாதனை புரிந்தார். அதே சமயம் ஆடவர் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளி வென்றார். இதன் மூலம் பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றது.

Para Olympics; The players from Tamil Nadu won medals and were amazing
மனிஷா ராமதாஸ்

இந்நிலையில் பாரா ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் சீனா வீராங்கனையிடம் 21க்கு17, 21க்கு10 என்ற செட் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதே சமயம் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் டென்மார்க் வீராங்கனையை 21க்கு 12, 21க்கு8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளார்.