இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சுப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் நேற்று (06-09-2023) பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகள் மோதின. நேற்றைய ஆட்டத்தில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்தன.
ஆசியக் கோப்பை 2023ன் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் நேற்று லாகூர், கடாபி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் சகிப் ஹல்ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கத்தில் முகமது-மெஹிதி ஹசன் கூட்டணி களமிறங்கியது. ஆட்டத்தின் 1.1 ஓவரில் ஹசன் எதிர்கொண்ட முதல் பந்தில் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய லட்டன் தாஸ் 16 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். தொடர்ந்து முகமது நயீம் 20 ரன்கள் எடுத்து 7.3 ஓவரில் வெளியேற, அவரைப் பின் தொடர்ந்து 9.1 ஓவரில் ஹ்ரிடாய் 2 ரன்களில் போல்ட் ஆனார். ஐம்பது ரன்களை கடப்பதற்குள் வங்கதேசம் 4 வீரர்களை இழந்து நிலை தடுமாறியது. அடுத்து ஆட்டத்தை நிலைநிறுத்தி முஷ்பிகுர் ரகுமானும் கேப்டன் சகிப் ஹல்ஹசனும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வங்கதேசம் மெதுவாக ரன்களை குவிக்கத் தொடங்கியது. பின்னர், சகிப் 57 பந்தில் 53 ரன்கள், முஷ்பிகுர் 64 ரன்கள் என இருவரும் அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தனர். 174 ரன்களுக்கு 6 விக்கெட்டை பறிகொடுத்த வங்கதேசம் மீண்டு எழும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், வீரர்கள் வரிசையாக வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். பின்னர், 19 ரன்கள் சேர்ப்பதற்குள் வங்கதேசம் 5 விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது. இதனால், 38.4 ஓவர்களில் 192 ரன்கள் மட்டுமே வங்கதேசத்தால் குவிக்க முடிந்தது. பாகிஸ்தான் தரப்பில், ஹாரிஸ் ரவுப் 4 விக்கெட்டுகளும், நசீம் ஷா 3 விக்கெட், அஹமத், அஷ்ரப், அப்ரிடி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என இரண்டாம் பாதியில் களமிறங்கியது பாகிஸ்தான் அணி.
தொடக்க ஆட்டக்காரர்கள் பக்கர் ஜமான் - இமாம் உல் ஹக் கூட்டணி இறங்கியது. ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடத் தொடங்கியது பாகிஸ்தான் அணி. பின்னர், 20 ரன்களில் ஜமான் வெளியேற பாகிஸ்தான் 35 ரன்களுக்கு 1 விக்கெட் என இருந்தது. அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் அசாம் களத்தில் இறங்கி 17 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றினார். இருந்தும், இமாம் - ரிஸ்வான் கூட்டணி சிறப்பாக விளையாடத் தொடங்கினர். இருவரின் ஆட்டத்தால் வங்கதேச பௌலர்கள் திணறினர். அதிரடியாக விளையாடி வந்த இமாம் உல் ஹக் 84 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து போல்ட் ஆனார். அதில், 4 சிக்சர், 5 பவுண்டரி என பறக்கவிட்டார். ரிஸ்வான் இறுதி வரை களத்தில் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார். ஆட்டம் முடிவில் அவர் 63 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் அணி தனது இலக்கான 293 ரன்களை 39.3வது ஓவரிலேயே கடந்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான். வங்கதேச பந்துவீச்சில் டஸ்கின், ஷோரிபுள், மெஹிதி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
ஆட்ட நாயகன் விருது இமாம்-உல்-ஹக்கிற்கு கிடைக்குமா? அல்லது 4 விக்கேட் எடுத்த ரவுப் பெறுவாரா என எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், ஹாரிஸ் ரவுப் ஆட்ட நாயகன் பட்டத்தைப் பெற்றார். ஆசிய கோப்பை 2023ன் சுப்பர் 4 சுற்றின் இரண்டாவது ஆட்டம் சனிக்கிழமை (09-09-2023) வங்கதேசம் - இலங்கை அணிகள் விளையாட உள்ளன. இது இந்திய நேரப்படி 3.00 மணிக்கு தொடங்கும். முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் தோற்றுள்ள வங்கதேச அணி சிறப்பான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.