இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.
பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார்.
அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.