இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டி20 தொடரில் வெற்றியையும், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வியையும் பதிவு செய்திருக்கிறது. இந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்கள், அதைப் பூர்த்தி செய்யத் தவறியிருக்கும் வேளையில், மீண்டும் தோனி எப்போது ஓய்வை அறிவிக்கப்போகிறார், வயதாகிவிட்டது, இனிமேல் அவ்வளவுதான் போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இதுகுறித்து பேசுகையில், தோனிக்கு சரியான இடம்கொடுத்து அவரைக் களமிறக்கினால், அவர் அதைப் பயன்படுத்தி அணிக்கு பக்கபலமாக இருக்கவேண்டும். ஆனால், அதை செய்யவில்லை. ஒரு வருடமாக அணியில் இருந்தும் அவர் செய்வதெல்லாம் மிகக்குறைவுதான். ஒருவேளை உலகக்கோப்பைக்கான அணியில் அவர் இருந்தால் இன்னும் கூடுதலாக அவர் தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஒருவருடமாக அணியில் தோனியின் பங்களிப்பு மிகவும் குறைவு என்பதே அவரது ஒட்டுமொத்த விமர்சனத்தின் மையக்கருத்தாக இருந்தது. இந்தக் கருத்து தோனி ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உண்மையில், தோனி மீதான கருத்து உண்மையாக இருக்க வேண்டுமானால், இந்திய அணிக்காக கங்குலி விளையாடிக் கொண்டிருந்தபோது என்ன செய்தார் என்பதையும் விவாதிக்க வேண்டும்தானே என பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
2008ஆம் ஆண்டு கங்குலி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், 2004-2005 காலகட்டத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரெக் சாப்பலின் தலையீடு, ஆதிக்கம் என இந்திய அணியே ஆடிப்போயிருந்தபோது, நெருக்கடியில் இருந்த கங்குலி சரியாக விளையாடவில்லை. அது தன் வாழ்நாளின் இருள் நிறைந்த பக்கங்கள் என கங்குலியே தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து சொதப்பலாக ஆடி விமர்சனங்களுக்கு ஆளான கங்குலியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அப்போதைய சராசரி 41.02 ரன்கள்.
அதேசமயம், தோனியின் தற்போதைய சராசரி 51.25 ரன்கள். அதேபோல், கடந்த ஒரு ஆண்டாக தோனி என்ன செய்தார் என்ற விமர்சனத்தை முன்வைக்கும் கங்குலி, தனக்கு நெருக்கடி கொடுக்கப்பட்ட அந்த ஒரு வருடமான 2004 செப்டம்பர் - 2005 செப்டம்பர் இடைவெளியில் 22 போட்டிகள் விளையாடி 545 ரன்கள் எடுத்திருந்தார். அவரது சராசரி 25.5 ரன்கள் மட்டுமே. 4 அரைசதங்கள் விளாசி ஒரேயொரு முறை மட்டுமே அவுட்டாகாமல் இருந்தார்.
தோனியோ, ஜூலை 2017 - ஜூலை 2018 வரை தான் விளையாடிய 27 போட்டிகளில் 604 ரன்கள் அடித்திருக்கிறார். அவரது சராசரி 50.3 ரன்கள். அதே நான்கு அரைசதங்கள் விளாசிய தோனி, 8 போட்டிகளில் நாட்-அவுட்டாக இருந்தார். இதில் கவனிக்கவேண்டிய விஷயமே, தோனி களமிறங்கும் பேட்டிங் பொஷிஷன்தான். இதை தொடக்க நிலையில் விளையாடும் கங்குலி எப்படி உணராமல் போனார்?
ஒருசில போட்டிகள்தான் ஒரு வீரரின் தனித்திறமையைத் தீர்மானிக்க முடியும் என்றால், அது ஒட்டுமொத்த அணிக்கும் பாதிப்பையே தரும். இந்திய அணியை பல்வேறு உச்சங்களுக்குக் கொண்டுசென்ற கங்குலியும் அதை தெளிவாகவே அறிந்திருப்பார்.