இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கைத் தேர்வுசெய்தது. முதலில் பேட் செய்ய வந்த இங்கிலாந்து தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
ஆனால், அடுத்தடுத்த விக்கெட்டுகள் வீழ்ந்ததில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களில் சுருண்டது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இழக்கை எட்டியது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக இருந்தவர்கள் 101 ரன்கள் விளாசிய கே.எல்.ராகுல் மற்றும் குல்தீப் யாதவ்வும்தான்.
இந்த வெற்றிக்காக களத்தில் தான் மேற்கொண்ட வியூகங்கள் குறித்து பேசிய குல்தீப் யாதவ், ‘எனக்கு முன் பந்துவீசிய யஸ்வேந்திர சகால், பந்து சரியாக டர்ன் ஆகவில்லை என்பதை உறுதிசெய்தார். அதனால், பந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் மட்டும் நான் கவனம் செலுத்தினேன். பந்தை அதிவேகமாக வீசினால் அது இங்கிலாந்து வீரர்களுக்கு நாம் தரும் வாய்ப்பாகிவிடும். நான் பேட்ஸ்மென்களைக் கவனத்தில் வைத்துக்கொள்வதில்லை. இருப்பினும், சில நேரங்களில் அது தேவைப்படுகிறது. ஐ.பி.எல். போட்டிகளில் ஜாஸ் பட்லருக்கு பந்துவீசிய அனுபவம் இப்போது கைக்கொடுத்தது. என் திட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தி, விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினேன்’ என தெரிவித்துள்ளார். இயான் மார்கன், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஜோ ரூட் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் ஒரே ஓவரில் குல்தீப் வீழ்த்தியது, ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இதனால், அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.