உலகக்கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய அந்த அணி இந்திய ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கியது. குல்தீப் மற்றும் சாஹல் ஓவர்களில் 140 ரன்களுக்கு மேல் அடித்து அதிரடி காட்டியது இங்கிலாந்து அணி. 337 ரன்களை அடித்த அந்த அணி 338 என்ற கடினமான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. இதனையடுத்து ஆடிய இந்திய அணி ரன்கள் எடுக்க திணறிய நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய அணியின் இந்த தோல்வியை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள கோலி, "இந்தப் போட்டியில் டாஸ் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்தது.அதுமட்டுமல்லாமல் ஒருபுறம் பவுண்டரியின் அளவு மிகவும் குறைவாக இருந்தது. ஒருபுறம் மிகப்பெரியது. வெறும் 59 மீட்டர் தூரம் மட்டுமே இருந்த சிறிய பவுண்டரியில் ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ஸ்வீப் போன்ற ஷாட்களால் சிக்சர் அடித்தால் சுழற்பந்துவீச்சாளரால் எதுவுமே செய்ய முடியாது.
மேலும் ஹர்திக் மற்றும் ரிஷப் பண்ட் விளையாடியபோது எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்களது விக்கெட் இந்திய அணியை தோல்வியின் பக்கம் இழுத்து சென்றது" என கூறியுள்ளார்.