நெருக்கடியான சூழலில் தோனியை நினைத்து விளையாடியதால் வெற்றி சுலபமானது என இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் ருசிகர தகவலை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி, அங்கு ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி, 5 - 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் ஆனது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸி. அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டவாதாக களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களே எடுத்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. ஆனால், அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் நிதானமாக ஆடி 110 ரன்கள் குவித்து, வெற்றி இலக்கை எட்ட வழிவகை செய்தார். இதன்மூலம் 9 விக்கெட் இழந்த இங்கிலாந்து அணி, வெற்றிபெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து கூலாக களத்தில் விளையாடிய ஜாஸ் பட்லரிடம், அதன் ரகசியம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், மிக சுலபமான இந்த இலக்கின் சேஷிங்கில் மளமளவென விக்கெட் வீழ்ந்து நாங்கள் பின்னடைவில் இருந்தோம். அப்போது நான் இந்திய விக்கெட் கீப்பர் தோனியை நினைத்துக் கொண்டேன். அவர் எந்த இலக்கையும் மிகவும் நிதானமாக சேஷ் செய்வார். அழுத்தத்தை முகத்தில் காட்டிக்கொள்ள மாட்டார். அதையே நானும் செய்தேன். இலக்கை 8 பந்துகள் மீதமிருக்க கடந்து வெற்றிபெற்றோம்’ என பேசியுள்ளார்.