Skip to main content

ஒருநாள் ஆட்டத்தில் டி20 ஆடிய வீரர் - மகிழ்ச்சியில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

ISHAN KISHAN

 

இந்தியாவின் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை போட்டிகள் இன்று (20.02.2021) தொடங்கின. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் சென்னை, சூரத், பெங்களூர், ஜெய்ப்பூர், இந்தூர், கொல்கத்தா ஆகிய 6 இடங்களில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஜார்க்கண்டும், மத்தியப் பிரதேசமும் மோதின.

 

இப்போட்டியில் டாஸ் வென்ற மத்தியப் பிரதேச அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷனும், உத்கர்ஷ் சிங்கும் களமிறங்கினர். உத்கர்ஷ் சிங் விரைவில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் இஷான் கிஷன் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி சதமடித்தார். சதத்திற்குப் பிறகும் அதிரடி கட்டிய இஷான் கிஷன், இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 173 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் வெறும் 94 பந்துகளில் 19 பவுண்டரிகள், 11 சிக்ஸர்களுடன் 173 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 184.04.

 

ஐபிஎல் நெருங்கி வரும் நிலையில் இஷான் கிஷனின் அதிரடி ஆட்டம், மும்பை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் (516) அடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வருட ஐ.பி.எல்லில் அதிக சிக்ஸர் அடித்த வீரரும் இவரே ஆவார். அவர் கடந்த வருட ஐபிஎல்லில் 30 சிக்ஸர்கள் விளாசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.