கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டாவது முறையாக இன்று மோதுகின்றன. கடைசியாக இந்த அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த போட்டியில் இதே அணிகள் மீண்டும் களமிறங்குகின்றன. ஆனால், மைதானம் மட்டும் வேறு. இன்றைய போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் வைத்து இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இதற்கு முன்னதாக இந்த இரு அணிகளும் மோதிய ஹோல்கர் மைதானம் அளவில் மிகச்சிறியது. அங்கு சின்னச்சின்ன தவறுகளும் சிக்ஸர்களாகும் வாய்ப்பிருந்தது. ஆனால், இன்றைய போட்டி நடக்கும் மான்சிங் மைதானம் அதற்கு நேரெதிரானது. இந்த மைதானத்தில் இதுவரை நடந்த ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டிகளிலும் சேர்த்து வெறும் 32 சிக்ஸர்களே அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் நுணுக்கமாகச் சொன்னால் சராசரியாக 27 பந்துகளுக்கு ஒருமுறை மட்டுமே அங்கு சிக்ஸர் பறக்குமாம்.
இரண்டு அணிகளிலும் பந்துவீச்சாளர்களை போதுமான அளவிற்கு சேதத்தை ஏற்படுத்தும் பேட்ஸ்மென்கள் இருந்தாலும், மைதானத்தின் தன்மை அதை தலைகீழாக மாற்றலாம். இந்த மைதானத்தில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் கடைசியாக மோதிய ஐந்து போட்டிகளில் நான்கில் ராஜஸ்தான் அணியே வெற்றிபெற்றுள்ளது. அதேபோல், நேருக்கு நேராக இந்த அணிகள் மோதிய 16 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணியே முன்னிலையில் இருக்கிறது.