ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. முதல் போட்டியில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து நேற்றைய போட்டியிலும் வென்ற ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அதிரடியாகக் கைப்பற்றியது.
கடந்த இரு போட்டிகளிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நேற்றைய போட்டியில் காயமடைந்தார். போட்டியின் நான்காம் ஓவரில் இந்திய வீரர் தவான் அடித்த பந்தை தடுக்க முற்படுகையில் அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனையடுத்து, ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டித்தொடரில் இருந்து வார்னர் விலகியுள்ளார்.
போட்டியின் முடிவில் இந்திய அணியின் துணைக்கேப்டனான கே.எல்.ராகுலிடம் இதுகுறித்து கேள்வியெழுப்புகையில், "அவரது காயத்தின் தன்மை குறித்து நமக்குத் தெரியவில்லை. அவரது காயம் நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான வீரர் அவர். ஒருவருக்கு எதிராக இவ்வாறு விரும்புவது சரியல்ல. அவர் குணமடைய நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டால் அது எங்கள் அணிக்கு நன்மை பயக்கும்" எனக் கூறினார்.
வார்னர் கடந்த இரு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி 69, 83 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.