இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி இந்தூரில் நடந்தது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலுக்கு பதிலாக சுப்மன்கில் சேர்க்கப்பட்டார். பந்துவீச்சிலும் ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்களும் சுப்மன் கில் 21 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவின் ஹுன்னாமன் 5 விக்கெட்களையும் நாதன் லியன் 3 விக்கெட்களையும் மர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆஸி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கவாஜா 60 ரன்களையும் லபுசானே 31 ரன்களையும் ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணியில் ஜடேஜா 4 விக்கெட்களையும் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி மீண்டும் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக புஜாரா 59 ரன்களை எடுத்தார். ஆஸி சுழற்பந்து வீச்சாளர் 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 76 ரன்களை மட்டுமே இலக்காக கொண்டு ஆஸி அணி 18.5 ஓவர்களில் 78 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ட்ராவிஸ் ஹெட் 49 ரன்களையும் லபுசானே 28 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.
இந்த போட்டியில் வென்றதன் மூலம் ஆஸி அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமெனில் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 4 ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவை கட்டாயமாக வீழ்த்த வேண்டும். 4 ஆவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்வது அல்லது தோல்வி அடையும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு இந்திய முன்னேறுவதில் சந்தேகம் ஏற்படும். ஏனெனில் நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடரை இலங்கை அணி வென்றால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்திய அணியும் வெற்றி பெற்று இலங்கை அணியும் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும் கூட புள்ளிப் பட்டியல் அடிப்படையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஏனெனில் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி 123 புள்ளிகளுடன் 60.29 வெற்றி சதவீதத்துடன் உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள இலங்கை 63 புள்ளிகளுடன் 53.33 வெற்றி சதவீதத்துடன் உள்ளது. எனவே, நான்காவது டெஸ்ட் போட்டி, ஐசிசி இறுதி டெஸ்ட் போட்டியை தீர்மானிக்கும். எனவே, நாடெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே இறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.