21வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட்கோஸ்ட்டில் கடந்த 4ம் தேதி ஆரம்பமானது. மொத்தம் 18 விளையாட்டுகளில் 275 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 71 நாடுகளைச்சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்தியாவிலிருந்து 218 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 11 நாட்கள் நடந்த காமன்வெல்த் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்தியாவை பொறுத்தவரை ஒரு பிரிவின் கீழ் அதிக பதக்கங்கள் பெற்றது துப்பாக்கி சுடுதல் போட்டியில்தான் 7 தங்கம் உட்பட 16 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. அதற்கடுத்த இடங்களில் மல்யுத்த போட்டியும், பளுதூக்கும் போட்டியும் உள்ளது. பேட்மிட்டன் கலப்பு குழு மற்றும் டேபிள் டென்னிஸ் மகளிர் குழு பிரிவிலும் இந்தியா முதன்முறையாக தங்கம் வென்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கியில் இந்தியா பதக்கங்கள் ஏதும் பெறாமல் ஏமாற்றமளித்தது.
தமிழக வீரர்கள் சரத்கமல் (டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு), சத்யன் (டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு) ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். மொத்தம் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களை வென்று 21வது காமன்வெல்த் தரவரிசைப்பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தது. இதற்கு முன்னதாக 2014ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடைபெற்ற 20வது காமன்வெல்த் போட்டியில் இந்தியா 15 தங்கம் உட்பட 64 பதக்கங்களை வென்று 5ஆம் இடத்தை பிடித்திருந்தது. 2014ம் ஆண்டு நடைபெற்ற கமென்வெல்த் போட்டிகளில் செயல்பட்டதைவிட இந்தாண்டு போட்டியில் மிகவும் சிறப்பாக வீரர்கள் செயல்பட்டுள்ளனர், என்கிறார்கள் வல்லுநர்கள். 2010ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 38 தங்கம் உட்பட 101 பதக்கங்களை வென்றதுதான், காமன்வெல்த் போட்டிகளிலேயே இந்தியா சிறப்பாக செயல்பட்ட தருணம். அடுத்த காமன்வெல்த் போட்டி 2022ம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம்மில் நடக்கவிருக்கிறது.