உலகக் கோப்பையின் 21வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே தரம்சாலாவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கான்வே ரன் கணக்கை தொடங்கும் முன் அவரது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான யங் 17 ரன்களில் ஷமி பந்தில் க்ளீன் போல்டு ஆனார். 19/2 என்று நியூசி தடுமாற பின் இணைந்த ரச்சின் மற்றும் மிட்செல் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் இணைந்து பொறுமையாக ஆடி ரன்கள் குவித்தனர். ரச்சின் 12 ரன்களில் ஷமி பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜடேஜா நழுவ விட்டார்.
பின்னர் பவுலிங்கை மாற்றி, மாற்றியும் விக்கெட் மேற்கொண்டு விழாமல் இருவரும் தங்களுக்குரிய பொறுப்பை உணர்ந்து ஆடினர். ஒரு வழியாக ரச்சினை ஷமி 75 ரன்களில் அவுட் ஆக்கினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் மிட்செல் நங்கூரம் போல நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு பிலிப்ஸ் மட்டும் துணை நின்று 23 ரன்கள் எடுக்க, அதிரடியாக ஆடிய மிட்செல் சதமடித்து அசத்தினார். ஒரு நாள் போட்டிகளில் அவர் அடிக்கும் ஐந்தாவது சதம் இதுவாகும். இறுதிவரை களத்தில் நின்ற மிட்செல் 130 ரன்கள் எடுத்து 49.5 ஓவரில் அவுட் ஆனார். இதில் 9 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் உலக கோப்பைகளில் இரு முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையப் படைத்துள்ளார். ஒட்டு மொத்தமாக உலக கோப்பைகளில் இரு முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 9 ஆவது வீரரானார். குல்தீப் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இந்திய அணி 274 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் 6 ஓவர்களில் 36-0 என விளையாடி வருகிறது.
- வெ.அருண்குமார்