Skip to main content

ஏலம் போகாத மிஸ்டர் ஐபிஎல்; மாற்று ஏலதாரருடன் மீண்டும் தொடங்கும் மெகா ஏலம்!

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

IPL AUCTION

 

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் முதற்கட்டத்தில் ஷிகர் தவானை பஞ்சாப் கிங்ஸ் அணியும், அஸ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பேட் கம்மின்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரபாடாவை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஏலம் எடுத்தன.

 

டிரன்ட் போல்ட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், முகமது ஷமியை குஜராத் டைட்டன்ஸ் அணியும், டு பிளசிஸை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டி காக்கை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், வார்னரை டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் ஏலம் எடுத்துள்ளது.

 

இதனைத்தொடர்ந்து ஹெட்மயரை 8.50 கோடிக்கு  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மணிஷ் பாண்டேவை 4.60 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், தேவ்தத் படிக்கலை 7.75 கோடிக்கு  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஏலம் எடுத்தன. டிஜே பிரவோவை 4.40 கோடிக்கும், உத்தப்பாவை 2 கோடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.

 

ஜேசன் ராயை குஜராத் டைட்டன்ஸ் 2 கோடிக்கு வாங்கியது. நிதிஷ் ரானாவை கொல்கத்தா அணி 8 கோடிக்கு வாங்கியது. ஹோல்டரை 8.75 கோடிக்கும், தீபக் ஹுடாவை 5.75 கோடிக்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வாங்கியது. ஹர்ஷல் படேலை ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10.75 கோடிக்கு வாங்கியது. மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை யாரும் ஏலம் எடுக்கவில்லை. அதேபோல் டேவிட் மில்லர், ஷாகிப் அல் ஹாசன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரையும் யாரும் ஏலம் எடுக்கவில்லை.

 

இதற்கிடையே ஏலத்தின்போதே ஏலதாரரான ஹக் எட்மீட்ஸ் தீடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவருக்கு மருத்துவ குழு சிகிச்சை அளித்தது. இந்த நிலையில் ஹக் எட்மீட்ஸ் போஸ்டுரல் ஹைபோடென்ஷன் காரணமாக மயங்கி விழுந்ததாகவும், அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹக் எட்மீட்ஸுக்கு பதிலாக இன்று மட்டும் சாரு ஷர்மா ஏலதராக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.