இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்தது. ரோகித் சர்மா இல்லாததால், கே.எல்.ராகுல் தலைமையில் விளையாடிய இந்திய அணி படுதோல்வியடைந்துள்ள நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் டிராவிட், கே.எல்.ராகுலின் கேப்டன்சி குறித்தும், இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்தும் பேசியுள்ளார்.
இந்திய அணியின் தோல்வி குறித்து ராகுல் டிராவிட் கூறியுள்ளதாவது; "கே.எல்.ராகுல் இப்போதுதான் கேப்டன்சி செய்யத் தொடங்குகிறார். அவர் ஓரளவு நன்றாகவே செயல்பட்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் தொடர்ந்து கேப்டன்சி செய்கையில், மெருகேறுவார். திறமையை வெளிப்படுத்தாததே தோல்விக்குக் காரணம்.
இந்தத் தோல்வி ஒரு நல்ல எச்சரிக்கை. ஆனால் நாங்கள் (சமீபகாலமாக) அதிகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. நாங்கள் கடைசியாக மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினோம். அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலககோப்பைக்கு முன்பு, அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளோம். வழக்கமாக 6, 7, 8ல் விளையாடும் வீரர்கள் அணித் தேர்வில் பங்கேற்கவில்லை. அவர்கள் திரும்பி வரும்போது, அணி சற்று வித்தியாசமாக இருக்கும்". இவ்வாறு ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.