ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.
கடந்த சுற்றுப்பயணத்தின்போது, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது போல இம்முறையும் கைப்பற்ற வேண்டும் என இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் உள்ளனர். கடந்த ஆண்டு அடைந்த தோல்விக்கு இம்முறை பதிலடி கொடுக்க வேண்டுமென ஆஸ்திரேலிய வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இம்முறை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பட்டாளம் வலுவாக இருப்பதால் டெஸ்ட் தொடர்கள் குறித்து கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சில தொடர்களாக ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் பவுன்சர் வகை பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறார். இதனையடுத்து, இந்திய வீரர்களும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு எதிராக இந்த யுக்தியை பயன்படுத்தலாம் எனப் பரவலாக பேசப்பட்டது.
ஸ்டீவ் ஸ்மித் இது குறித்துப் பேசுகையில் "நான் என் கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய பவுன்சர்களை எதிர்கொண்டுள்ளேன். அதை எதிர் கொள்வதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. எனக்கு எதிராக அந்த யுக்தியை எதிரணி கையாண்டால், அது எங்கள் அணிக்குத்தான் சாதகமாக அமையும். இதை பொறுத்திருந்துதான் பார்க்க இருக்கிறோம் என்று நினைக்கிறேன்" எனக் கூறினார்.
மேலும் நியூசிலாந்து அணி வீரர் நீல் வாக்னரை குறிப்பிட்டு பேசிய ஸ்மித், "அவரைப்போல அனைவராலும் பவுன்சர் வீசிவிட முடியாது. சில பந்துவீச்சாளர்கள் எனக்கு எதிராக இம்முயற்சியை எடுத்து அது கடினம் என்பதை உணர்ந்தார்கள். நீல் வாக்னரிடம் அற்புதமான திறமை இருந்தது" எனக் கூறினார்.
இந்நிலையில், இந்திய அணியின் கவாஸ்கர் இது குறித்துப் பேசுகையில், "ஷார்ட் பிச் வகை பந்துகளை எதிர்க்கொள்ள யாராலும் முன்கூட்டியே தயாராக இருக்க முடியாது. சிறந்த ஷார்ட் பிச் வகை பந்து பேட்ஸ்மேனை நிலைகுலையச் செய்துவிடும். நான் தயார் என்று யாரும் கூற முடியாது. முகமது ஷமி திறமை வாய்ந்த வீரர். அவர் உயரம் சற்று குறைந்தவர் என்பதால், அவர் வீசும் பவுன்சர்கள் தோள்பட்டைக்கும் தலைக்கும் இடையே வரும். அதை எதிர்க்கொள்வது என்பது கடினம். அவர் சரியாக பந்துவீச ஆரம்பித்தால், அவர் எதிர்கொள்வதற்கு எளிமையான பந்துவீச்சாளர் அல்ல" எனக் கூறினார்.