Skip to main content

மகளிர் தினத்தில் பிறந்து மகளிர் கிரிக்கெட்டில் சாதித்தவர்

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

2017-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 35 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டு இருந்தது. பின்னர் களமிறங்கிய ஹர்மன் பிரீட் கவுர் ஆஸ்திரேலியா பந்துவீச்சை நாலாபுறமும் விளாசினார். 115 பந்துகளில் 20 பவுண்டரிகள், 7 சிக்ஸ்கர்கள் உட்பட 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடினார். உலகக்கோப்பைகளில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 

 

harman preet

 

மழையின் காரணமாக அந்த போட்டி 42 ஓவராக குறைக்கப்பட்டிருந்தது. 50 ஓவர் முழுவதும் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருந்தால் 200 ரன்களை எடுத்திருப்பார் கவுர். இவரின் இந்த இன்னிங்ஸ், 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 175 ரன்கள் எடுத்திருந்த கபில் தேவ் இன்னிங்ஸுடன் ஒப்பிடும் அளவிற்கு ஸ்பெஷல் இன்னிங்ஸாக இருந்தது. 
 

2009-ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அந்த தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஹர்மன் பிரீத் கவுர் அடித்த இமாலய சிக்ஸர் மகளிர் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட மறக்க முடியாத சிக்ஸர். இவரின் இந்த பவரான சிக்ஸ் பலரை ஆச்சரியப்படுத்தியது. இதனால் இவரது பேட் லேப்பில் சோதனை செய்யப்பட்டது. ஊக்கமருந்து சோதனைக்கும் உட்படுத்தப்பட்டார். அனைத்து சோதனை முடிவுகளும் கவுருக்கு சாதகமாக இருந்தது.

 

harman preet

 

கவுர் போட்டிகளின்போது மைதானத்தில் விராத் கோலியை போல மிகவும் அக்ரசிவாக இருப்பார். கவுரின் ரோல் மாடல் கிரிக்கெட்டர் விரேந்திர சேவாக். ரோல் மாடலைப் போலவே அதிரடிக்கு பெயர் பெற்றவர் ஹர்மன் பிரீட். 2017-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் 8 இன்னிங்ஸ்களில் 359 ரன்கள், பேட்டிங் சராசரி 60, ஸ்ட்ரைக் ரேட் 95. இந்த தொடரில் ஒரு சதம், 2 அரைசதங்கள் அடித்து அசத்தினார்.
 

ஹர்மன் பிரீட் கவுர் பஞ்சாப் மாநிலம் மோகாவில் பிறந்தார். 20 வயதில் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2009-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாடினார். அதே ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் விளையாடினார். 

 

2012-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை டி20 தொடரில் கேப்டனாக இந்திய  அணியை வழிநடத்தினார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணியை இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை வென்றது இந்திய அணி. அணிக்கு தேவையானபோது ஸ்பின் பவுலிங்கிலும் அவ்வப்போது சிறப்பாக பந்துவீசுவார். 2014-ல் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 85 ரன்களுக்கு 9 விக்கெட் எடுத்தது இந்திய மகளிர் கிரிக்கெட்டில் இரண்டாவது சிறந்த பந்துவீசாக உள்ளது.  

 

harman preet

 

2018-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கவுர் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில்  51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் 5 போட்டிகளில் 183 ரன்கள், பேட்டிங் சராசரி 45.75. 2018-ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மகளிர் டி20 சர்வதேச போட்டியில் சதமடித்து, டி20-களில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
 

இவரது தந்தை ஹர்மந்தர் சிங் ஃபுளார் மாநில அளவிலான கைப்பந்து, கூடைப்பந்து மற்றும் கிளப் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவரது தந்தை இவரை ஹாக்கி வீரராக பயிற்சியில் ஈடுபடுத்தினார். ஆனால் கவுர் கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.  
 

கவுர் தொடக்க காலங்களில் ஹாக்கி ஸ்டிக் மூலம் கிரிக்கெட் பேட்டிங் பயிற்சி செய்து வந்தார். அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற முயன்றபோது அவரது குடும்பத்தால் அகாடமிக்கான தொகையை கட்ட இயலவில்லை. சோதி என்ற பயிற்சியாளர் உதவியுடன் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். 

 

2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மகளிர் பிக் பாஷ் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் வீரர் இவர்தான். 2017-ல் சிட்னி தண்டர்ஸ் அணியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். 
 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்மன் பிரீட் கவுர் 2017-ஆம் ஆண்டு அர்ஜுனா விருதினை பெற்றார். மகளிர் தினத்தன்று பிறந்தவர் என்பது குறிபிடத்தக்கது.