இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கங்குலியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு ஒரு அடைப்பு சரிசெய்யப்பட்டது.
கங்குலி இதயத்தில் இருக்கும் மேலும் இரண்டு அடைப்புகளை சரி செய்ய ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அவசியம் என்றாலும், அவர் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாலும், இதயத்தில் வலி இல்லாமல் இருப்பதாலும், சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பிறகு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யலாம் என மருத்துவக் குழு முடிவுசெய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை முடிந்த கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது பேசிய கங்குலி, "எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி. நான் இப்போது நலமாக உள்ளேன். கூடிய சீக்கிரம் பறக்கத் தொடங்குவேன் என நம்புகிறேன்" என்று கூறினார்.